

மதுரை: தமிழகத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக பிரைய்லி வடிவ திருக்குறள் உட்பட 45 சங்க இலக்கிய நூல்கள் வழங்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
பார்வை மாற்றுத்திறனாளிகள் திருக்குறளை அவர்களாகவே படித்து பயன்பெறும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பிரெய்லி வடிவில் திருக்குறள் புத்தகம் வெளியிட உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்து நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவு: "பிரைய்லி வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள 45 சங்க இலக்கிய நூல்கள் (திருக்குறள் உட்பட) பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம் சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய சொம்மொழி ஆய்வு மையத்தையும், தமிழக அரசையும் உயர் நீதிமன்றம் பாராட்டுகிறது. பார்வை மாற்றுத்திறனாளிகள் நாட்டின் கலச்சாரம் மற்றும் மகிமையை படித்து, புரிந்து உணரும் வகையில் பிரைய்லி வடிவில் சங்க இலக்கிய நூல்கள் இலவசமாக கிடைப்பதை பெரிய அளவில் விளம்பரப்படுத்த வேண்டும்"
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.