

புதுச்சேரி: “மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் அரசு உறங்கிக்கொண்டிருந்தால் விரைவில் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக புதுச்சேரி மாறிவிடும்” என்று ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியான அதிமுக எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக இன்று புதுச்சேரி அதிமுக மாநில துணைச் செயலர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்ட அறிக்கையில், "புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமாக பாண்லே புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு பல ஆண்டுகளாக பால் வழங்கி வருகிறது. பாண்லே அதிகாரிகளின் கமிஷன் பேராசையினால் தற்போது பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த செயற்கையான பால் தட்டுப்பாட்டினால் புதுவை மாநில மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். பால் பற்றாக்குறையினால் பாலுக்கு பதிலாக பவுடரை கலந்து விநியோகம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் செயல் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கக் கூடியது. பற்றாக்குறையை போக்க அவசர கதியில் பாண்லே அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
பாண்லே பால் குழந்தைகள், மாணவர்களுக்கு அதிக அளவில் பெற்றோர் கொடுக்கின்றனர். பவுடர் பாலால் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு எற்படும். மாணவர்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே குழந்தைகள், மாணவர்கள் ஆரோக்கியத்துடன் அரசு விளையாடாமல் கொள்முதல் செய்து பாலை வழங்க வேண்டும். புதுச்சேரி மக்களுக்கு இலவசங்களை வழங்குவது மட்டுமே முதல்வரின் வேலை இல்லை.
மக்களின் அடிப்படை பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்வு காண்பவரே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமையாகும். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு அனைத்து மக்கள் பிரச்சினைகளும் மவுனம் காப்பதும், அதற்கு பதிலாக ஆளுநர் தமிழிசை மக்கள் பிரச்சனைகளுக்கு அறிவிப்பு வெளியிடுவது ஜனநாயக கேலிக்கூத்து.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் பிரச்சினைகளை தீர்வு காணாமல் உறங்கிக் கொண்டிருந்தால் விரைவில் சட்டமன்றம் இல்லா யூனியன் பிரதேசமாக புதுவை மாறிவிடும் என்று அதிமுக சார்பில் எச்சரிக்கிறோம்" என்று வையாபுரி மணிகண்டன் கூறியுள்ளார்.