Published : 19 Oct 2022 02:38 PM
Last Updated : 19 Oct 2022 02:38 PM
சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னை - கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தீக்காய சிறப்புப் பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி தீக்காய உள் நோயாளிகள் பிரிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை உயிர் காக்கும் முறைகள் மற்றும் விபத்தினால் காயம் அடைந்தோரை பாதுகாக்கும் முறைகள் ஆகிய வசதிகளை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1973-ஆம் ஆண்டு 75 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு தீக்காய பிரிவு துவங்கப்பட்டது. 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் தீக்காயம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் அறுவை அரங்குகள் செயல்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு தேவைக்கேற்ப அவசர அறுவை சிகிச்சை முறைகளும் செய்யப்பட்டு வருகிறது. நோயாளிகள் முதலில் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ஆரம்ப கட்ட அவசர சிகிச்சைக்குப் பின் தீக்காயப் பிரிவிற்கு மாற்றப்படுகிறார்கள். சீரான காற்றோட்ட வசதியுடன் கூடிய வார்டும், அறுவை அரங்கும் உள்ளது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக தனித்தனி வார்டுகள் உள்ளன. குழந்தை உள்நோயாளிகள் விளையாடி பொழுது போக்க இடம் உள்ளது.
வாரத்தில் 3 நாட்கள் புறநோயாளிகள் பிரிவு மற்ற 3 நாட்கள் அறுவை அரங்கும் செயல்பட்டு வருகிறது. சத்தான உணவு முறைகளைப் பற்றி வலியுறுத்தவும், அறிவுரை வழங்கவும், ஆலோசனை வழங்கவும், இயன்முறை மருத்துவ முறைகளை கற்று கொடுக்கவும் பிரிவுகள் உள்ளன. தீக்காயம் என்பது அஜாக்கிரதை, மன உளைச்சலால் தற்கொலை முயற்சி, ஆசிட், மின்சாரம் தாக்குதல் மற்றும் கவனக்குறைவாக பட்டாசு வெடிப்பதாலும் ஏற்படலாம். மக்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
தீபாவளி பட்டாசு விபத்தினால் ஏற்பட்ட தீக்காயத்திற்கு 2019-ல் 40 பேர் உள்நோயாளிகளாகவும், 15 பேர் வெளிநோயாளிகளாகவும், 2020ல் 9 பேர் புறநோயாளிகளாகவும், 6 பேர் உள்நோயாளிகளாகவும், 2021 ல் 22 பேர் புறநோயாளிகளாகவும், 8 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர்" என்று அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT