Published : 19 Oct 2022 01:29 PM
Last Updated : 19 Oct 2022 01:29 PM

திருப்பூர் காப்பக குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பணியிடை நீக்கம்

திருப்பூர்: திருமுருகன்பூண்டி அருகே உள்ள காப்பகத்தில் குழந்தைகள் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்த சேவாலய ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட பின்னர் ஏற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகள் கடந்த அக்டோபர் 5ம் தேதி உயிரிழந்தனர்.

11 மாணவர்கள் மற்றும் காவலாளி என 12 பேர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று ஈரோட்டில் உள்ள அரசு காப்பகம் மற்றும் வீடுகளுக்கு சிலர் திரும்பினர். இதற்கிடையே கடந்த 7ம் தேதி திமுக கட்சி சார்பில் நிவாரண நிதியை தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் காப்பகத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், "குழந்தைகள் தங்கியிருந்த இடத்தை மெத்தனப்போக்காக கையாண்ட நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் மூடப்படுகிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியா மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சமூக பாதுகாப்புத்துறையின் நன்னடத்தை அலுவலர் து.நித்யா (பொ) பதவி ஏற்றார். இந்நிலையில் 3 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x