

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் 608 பக்க அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில் அவரது தோழி சசிகலா, மருத்துவர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போது சுகாதாரத் துறை செயலராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரையும் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று அரசுக்கு விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த அறிக்கையில் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் அளித்த சாட்சியம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதில், ஆணையத்தில் சாட்சிகள் விசாரணையின்போது, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர் தர்மராஜன், முன்னாள் மயக்கவியல் மருத்துவர் பி.கலா ஆகியோர், 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி மாலை 5 மணிக்கு தாங்கள் வீட்டில் இருந்தபோது, மருத்துவமனை டீன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக கூறினார் என்று தெரிவித்தனர்.
சுகாதாரத்துறை செயலர் தொலைபேசியில் தங்களை அழைத்து அப்போலோ மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியதாகவும், அதன்படி, மாலை 6 மணிக்கு அங்கு சென்றபோது, முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பெரும் பதற்றம் நிலவியதாகவும் தெரிவித்துள்ளனர்.
அப்போதைய தலைமைச் செயலர் ராமமோகன ராவ் அளித்த சாட்சியத்தில், டிசம்பர் 4-ம் தேதி தனக்கு கிடைத்த தகவலின் பேரில் மருத்துவமனைக்கு சென்றதாகவும், ஜெயலலிதாவுக்கு மூச்சுத் திணறல் இருப்பதாகவும், மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், எனவே, அவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
வார்டில் சென்று பார்த்தபோது, ஜெயலலிதாவுக்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மூழ்கியிருப்பதை கண்டு, அவர் பெரும் அதிர்ச்சியுற்றதாக கூறினார். இது ஏன் வார்டில் செய்யப்படுகிறது என்று மருத்துவர்களிடம் கேட்டு, அறுவை சிகிச்சை அரங்கத்துக்கு அழைத்து செல்லலாம் என்று கூறி, உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்ததாகவும் சாட்சியம் அளித்துள்ளார். இவ்வாறு விசாரணை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.