Published : 19 Oct 2022 04:56 AM
Last Updated : 19 Oct 2022 04:56 AM

சட்டப்பேரவை மரபு சிதைந்து விட்டது - எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவைத் தலைவர் முடிவால் மரபு சிதைந்துவிட்டது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுகவின் 62 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை துணைச் செயலாளராகவும் நியமிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டு சுமார் 2 மாதம் ஆகிறது. பிறகு, நினைவூட்டு கடிதம் 2 முறை வழங்கப்பட்டது.

எங்களின் கோரிக்கையை ஏற்காமல் ஏற்கெனவே துணைத் தலைவராக இருந்தவரையே தொடர வேண்டும் என்று அறிவித்துள்ளனர். நியாயமாக நடுநிலையோடு செயல்பட வேண்டிய சட்டப்பேரவைத் தலைவர் தற்போது அரசியல் ரீதியாக செயல்படுவதாக பார்க்கிறோம்.

திமுக தலைவரின் ஆலோசனைபடிதான் சட்டப்பேரவைத் தலைவர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதத்தை அளித்து 3-வது முறையாக இன்று (நேற்று) காலை சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நேரில் சந்தித்து எங்கள் தரப்பு நியாயத்தை தெரிவித்தோம். இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திமுக தலைவர், சட்டப்பேரவைத் தலைவர் மூலமாக எங்களைப் பழிவாங்க பார்க்கிறார். அது ஒருபோதும் நடக்காது. என்றைக்கும், நீதி, உண்மை, தர்மம்தான் வெல்லும்.

திமுகவுக்கு ஆதரவாக எங்களுடைய கட்சியில் இருக்கக்கூடிய உயர்ந்த பொறுப்பாளர் செயல்பட்டு வருகிறார் என்பதை நாங்கள் பலமுறை ஊடகங்களில் தெரிவித்து வந்தோம். அது இன்று உண்மையாகிவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினரின் மேல்முறையீட்டு மனுவில் தடை ஆணை வழங்காததால் அதிமுக பொதுக்குழுவில் அவர்கள் நீக்கப்பட்டது செல்லும் என்பது இன்று வரை உள்ளது. அதையெல்லாம் சட்டப்பேரவைத் தலைவர் கவனத்தில் கொள்ளவில்லை. நீதிமன்ற உத்தரவையும் சட்டப்பேரவைத் தலைவரிடம் ஒப்படைத்து விட்டோம்.

நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பையே சட்டப்பேரவைத் தலைவர் மதிக்கவில்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நாங்கள்தான் ஆணையம் அமைத்தோம். அதற்கு, இவர்கள் ஒன்றும் விளக்கம் தர தேவையில்லை.

சொத்து வரி, மின்கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு என மக்கள் இந்த ஆட்சி எப்போதும் போகும் என்று கொதித்து போயுள்ளனர். இதை நாங்கள் கூறவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே, காலையில் எழும்போது கட்சியினர் என்ன பிரச்சினை செய்துவிடுவார்களோ என்று அச்சத்தில் கண் விழிப்பதாகக் கூறியுள்ளார்.

திமுக தலைவருக்கு மட்டுமல்ல, திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களுக்கும் தூக்கம் போய்விட்டது. மக்களின் கோபத்தை திசைதிருப்ப இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளனர். அதிமுகவை பொறுத்தவரை இருமொழி கொள்கையைத்தான் கடைபிடிக்கும்.

ஓபிஎஸ்ஸை பீ டீமாக வைத்து கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இப்போதுதான் பூனை குட்டி வெளியே வந்துள்ளது. எவ்வளவு வேகமாக சீல் வைத்தனர். ஆனால், நீதிமன்ற தீர்ப்பு கொடுத்த பிறகும் உடனடியாக கட்சி அலுவலக சாவியைக் கொடுக்கவில்லை. போராடிதான் சாவியை பெற்றோம்.

சட்டப்பேரவைத் தலைவர் தவறான தீர்ப்பை அளித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சட்டப்பேரவை மரபு சிதைந்துவிட்டது. ஆளுநரை பார்ப்பது குறித்து பிறகு சொல்லப்படும். இவ்வாறு பழனிசாமி தெரிவித் தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x