

சென்னை: நடப்பு 2022-23-ம் நிதியாண்டுக்கான 3-வது காலாண்டில் அஞ்சல்துறை சேமிப்புத் திட்டங்கள் சிலவற்றுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதேபோல், மாதாந்திர வருமான கணக்குத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 6.6 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதம் 6.9 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், 2 வருட டைம் டெபாசிட் திட்டத்துக்கு 5.5 சதவீதத்தில் இருந்து 5.7 ஆகவும், 3 வருட டைம் டெபாசிட் திட்டத்துக்கு 5.7 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் டிச. 31-ம் தேதி வரை இந்த வட்டி விகிதம் அமலில் இருக்கும். அதே சமயம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் (7.6 சதவீதம் வட்டி), பொது சேமநல நிதி திட்டம் (7.1), தேசிய சேமிப்பு பத்திரம் (6.8) ஆகியவற்றுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை என அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.