

இலங்கையில் உள்ள செல்போன் நிறுவனங்களின் சிக்னல் தனுஷ்கோடி வரை எட்டுவதால், கடத்தல் கும்பல்கள் தப்ப உதவியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
1978-ல் ராமேசுவரத்திலும், தலைமன்னாரிலும் 100 மீட்டர் டிரான்ஸ்மிஷன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, இந்தியா விலிருந்து இலங்கைக்கு தொலை பேசி சேவை வழங்கப்பட்டது. 1983-ல் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில், இந்த கோபுரங்கள் மூலம் தொலைபேசி சேவை வழங்குவது தடைபட்டது. 1988-ல் இந்திய அமைதிப் படை இலங்கை சென்றபோது டிரான்ஸ்மிஷன் மீண்டும் செயல் பட்டது.
பின்னர், 2007-ல் ராமேசுவரத்தில் இருந்த பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் செல்போன் நிறுவன கோபுரங்களின் சிக்னல் இலங்கை வரை எட்டியது. இதனை விடுதலைப் புலிகளும் பயன்படுத்தியதால், ராமேசுவரத்தில் உள்ள செல்போன் டவர்களின் அலைக்கற்றை வீச்சின் சக்தியை குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இலங்கையில் தொலைத்தொடர்புத் துறை தனியார் மயமாக்கப்பட்ட பின், இந்திய செல்போன் நிறுவனங்கள் இலங்கையில் சேவைகளை வழங்கி வருகின்றன. தற்போது மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களின் செல்போன் டவர்களின் அலைக்கற்றை வீச்சு தனுஷ்கோடியில் துல்லியமாகக் கிடைக்கிறது. இதனால் இந்திய-இலங்கை கடத்தல்கார்களுக்கு இருநாட்டு கடற்படையிடமிருந்து தப்புவதற்கு உதவியாக உள்ள தாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து க்யூ பிரிவு காவல்துறையினரிடம் கேட்டபோது
தனுஷ்கோடி, அரிச்சல்முனை, இந்திய மணற்தீடை பகுதிகளில் இலங்கையில் உள்ள டயலாக் மற்றும் ஏர்டெல் செல்போன் டவர்களின் சிக்னல்கள் கிடைக் கின்றன. இவற்றின் சிக்னல் அளவை குறைக்க, மத்திய அரசு இலங்கை அரசிடம் கோரியுள்ளது, என்றனர்.
கடந்த 11 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட 1000 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்களையும், இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்படவிருந்த 100 கிலோவுக்கும் மேலான தங்கத்தையும் இரு நாட்டு கடற்படை மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.