

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை யில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார். விரைவில் வீடு திரும்பி பணிகளை தொடருவார் என்று அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறினார்.
முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோரது ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவமனையின் மூத்த டாக்டர்கள் குழுவினர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் சுவாசித்து வந்த முதல்வர், கொஞ்சம் கொஞ்ச மாக தானாகவே சுவாசிக்கத் தொடங்கினார். இதையடுத்து, செயற்கை சுவாசக் கருவிகள் 2 நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. தொண்டைப் பகுதியில் செயற்கை சுவாசத்துக்காக பொருத்தப் பட்ட டியூப் மட்டும் இன்னும் அகற்றப் படவில்லை.
இந்நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள ரெயின் ட்ரீ ஹோட்டலில் நேற்று நடந்த விழா ஒன்றில் அப்போலோ மருத்துவ மனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போலோ பொது மருத்துவத்துறை முதுநிலை ஆலோசகர் டாக்டர் டி.வி.தேவராஜன் எழுதிய ‘அப்போலோ மருத்துவ மனைகள் மருத்துவப் பாடப் புத்தகம்’ என்ற நூலை அவர் வெளியிட்டார். விழா நிறைவில், முதல்வரின் உடல்நிலை பற்றி பிரதாப் சி.ரெட்டி முதல் முறையாக செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
தொடர் சிகிச்சையால், முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள் ளது. இதற்கு டாக்டர்கள் குழுதான் காரணம். அவர்கள் மட்டுமின்றி செவிலியர்கள், மருத்துவ உதவிக் குழுக் களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எய்ம்ஸ் டாக்டர்கள் குழு, லண்டன் டாக்டர் என அனைவருமே தங்களது பணிகளை மிகச் சிறப்பாக செய்தனர். முதல்வர் நலம்பெற வேண்டும் என்ற லட்சக்கணக்கான மக்களின் பிரார்த்தனையும் பெரிய அளவில் கைகொடுத்துள்ளது.
முதல்வர் வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தனக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவருக்கு நன்கு தெரியும். மருத்துவ மனையில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதும் அவருக்கு நன்றாகவே தெரி கிறது. தனக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையால், அவர் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளார். அவர் முழுமை யாக குணமடைந்துவிட்டார். விரைவில் வீடு திரும்பி பணிகளை தொடருவார்.
அளிக்கப்படும் சிகிச்சை தொடர் பான அனைத்து விவரங்களும் அவருக்கு முழுமையாகத் தெரியும் என்பதால், வீடு திரும்புவது குறித்தும் அவரே முடிவு செய்வார். அவரை வேறு வார்டுக்கு மாற்றுவது குறித்து முடிவு செய்யப் படும்.
இவ்வாறு டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறினார்.
மலேசிய தமிழர்கள் பிரார்த்தனை
இதற்கிடையில், மலேசிய கல்வித் துறை துணை அமைச்சர் கமலநாதன், மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் நக்மா, நடிகை விஜயசாந்தி ஆகியோர் நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலை பற்றி விசாரித்தனர்.
செய்தியாளர்களிடம் கமலநாதன் கூறும்போது, ‘‘முதல்வரின் உடல்நிலை பற்றி டாக்டர்கள் விரிவாகத் தெரிவித்தனர். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். அவர் விரைவில் குணமடைய நான் மட்டுமின்றி மலேசியாவாழ் தமிழர்கள் அனை வரும் பிரார்த்தனை செய்கிறோம். முதல்வருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு பாராட்டுகள்’’ என்றார்.
நக்மா கூறியபோது, ‘‘முதல் வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்கிறோம்” என்றார். விஜயசாந்தி பேசும்போது, ‘‘முதல்வருடைய நல்ல மனசுக்கு, அவருக்கு எதுவும் ஆகாது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்’’ என்றார்.
அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன் னையன் கூறும்போது, ‘‘முதல்வருக்கு நுரையீரலில் ஏற்பட்டிருந்த தொற்று பாதிப்பு முழுவதும் சரியாகிவிட்டது. அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். அவர் விரைவில் வேறு வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்’’ என்றார்.