

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதியில் கிரீம்ஸ் சாலை, சுதந்திரா நகர்விரிவு, கார்ப்பரேஷன் குடியிருப்பு குடிசைப் பகுதி மக்களுக்கு மாநகராட்சி மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகத்திடம் முன் நுழைவு அனுமதி பெற்று குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நா.எழிலன் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளித்து பேசியதாவது: கிரீம்ஸ் சாலை பகுதியில் 0.95ஏக்கர் பரப்பில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்ட நிலத்தை வாரியத்துக்கு, நில உரிமை மாற்றம்செய்ய மாநகராட்சியிடம் முன்னுழைவு அனுமதி கேட்டுள்ளோம்.
சுதந்திரா நகர் விரிவு பகுதியில்காவல் துறை பயன்பாட்டில் உள்ள நிலத்தில் 200 குடிசை வீடுகளும், கார்ப்பரேஷன் குடியிருப்பு பகுதியில் குடிநீர் வாரிய பயன்பாட்டு நிலத்தில் 120 குடிசை வீடுகளும் தனித்தனியாக அமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த குடிசைப் பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியரிடம் முதல் கட்டமாக முன் நுழைவு அனுமதி கேட்டுள்ளோம். மேலும், புஷ்பா நகர் திட்டப் பகுதியில் உள்ள குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளதால், மறு கட்டுமானம் செய்யவல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. வரும் நிதியாண்டில் முதல்வர் ஒப்புதல் பெற்று இத்திட்டப் பகுதியில் மறு கட்டுமானம் செய்யப்படும் என்றார்.