Published : 19 Oct 2022 06:44 AM
Last Updated : 19 Oct 2022 06:44 AM
சென்னை: சென்னையில் கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு 50, 60 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பழுதடைந்த குழாய்களை மாற்ற விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேசும்போது, ‘‘பாதாள சாக்கடை பணி செய்யும்போதே குடிநீர் குழாய் அமைக்கும் பணியையும் சேர்த்தே செய்யலாம். இதனால் அரசு பணம் வீணாவது தடுக்கப்படும்’’ என்றார்.
வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் அசன் மவுலானா பேசும்போது, ‘‘மழை பெய்யும்போது கழிவுநீர் குழாயில் தண்ணீர்அதிகமாக வந்து சாலையில் வழிகிறது. எனவே, தற்போது மழைநீர் கால்வாய்கள் சீரமைப்பதுபோல் கழிவுநீர் குழாய்களையும் சீரமைக்க வேண்டும். மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்படும்போது கழிவுநீ்ர் குழாய்கள் உடைக்கப்படுகின்றன’’ என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தற்போது மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளுக்கு பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டு, அதன்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதாள சாக்கடை என்பது கழிவுநீர் செல்லும் குழாய். குடிநீர் இணைப்பு மக்களுக்கு குடிநீர் கொண்டு செல்வது. இரண்டு பணியையும் சேர்த்து செய்தால் எங்காவது தவறு நேர்ந்து இரு தண்ணீரும் ஒன்றாக இணைந்துவிடும்.
எங்கு தண்ணீர் கிடைக்கிறதோ அங்கிருந்துதான் குடிநீர் குழாயும், கழிவு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து பாதாள சாக்கடை திட்டத்தையும் செயல்படுத்த முடியும். இரண்டையும் ஒன்றாக செய்தால் செலவு குறையும்தான். ஆனால், இருக்கும் சங்கடங்களை கருத்தில் கொண்டு இணைத்து செய்யசாத்தியமில்லை. செலவு அதிகமானாலும் தனித்தனியாக செயல்படுத்தப்படும்.
1,000 கி.மீ. கால்வாய் பணி: சென்னை மாநகரம் தோன்றி 330 ஆண்டுகளில், 1,000 கிமீ அளவுக்கு மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அரசு பொறுப்பேற்றதும் தற்போது 1,000 கிமீ நீளத்துக்கு மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் வேலைகள் நடைபெறும்போது, கழிவுநீர் குழாய்கள் உடைகின்றன. மின் கேபிள்கள் அறுபடுகின்றன. இவற்றைத் தாண்டிதான், கால்வாய்ப் பணிகள் நடைபெறுகின்றன. சென்னையில், மழைநீர் வடிகால் மட்டுமல்ல; கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட்டும் 50, 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. பழுதடைந்த குழாய்களை மாற்ற திட்ட அறிக்கைதயாரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஒப்புதல் பெற்று பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT