ஆரோவில் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆளுநர் ரவி ஆய்வு

ஆரோவில்லில் அமைந்துள்ள இயற்கை விவசாய பண்ணையில், அதன் பொறுப்பாளர்களிடம் உரையாடும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. படம்.எம்.சாம்ராஜ்
ஆரோவில்லில் அமைந்துள்ள இயற்கை விவசாய பண்ணையில், அதன் பொறுப்பாளர்களிடம் உரையாடும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. படம்.எம்.சாம்ராஜ்
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம்,ஆரோவில் சர்வதேச மைய பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை, அதன் ஆட்சிமன்றக் குழுத் தலைவரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி நேற்று ஆய்வு செய்தார்.

புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியில்,விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரோவில் சர்வதேச மையத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். ஆரோவில் சர்வதேச மையத்தின் ஆட்சி மன்றக் குழுத் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு முதல் தமிழக ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர், ஐஏஎஸ் அலுவலர் மற்றும் ஆரோவில் பவுண்டேசனை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆரோவில் சர்வதேச மைய பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையிலிருந்து, ஆரோவில் சர்வதேச மையப் பகுதிக்கு வருகை தந்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆளுநர் ரவிக்கு பூங்கொத்து அளித்து வரவேற்றார். மேலும் ஆரோவில் பவுண்டேசன் செயலர் ஜெயந்தி மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட எஸ்.பி. நாதா ஆகியோரும் ஆளுநரை வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து ஆரோவில் பகுதியில் வசிப்பவர்களை சந்தித்து அவர்களிடம் அங்கு நிலவும் சூழல் குறித்து விசாரித்தார். இரவு ஆரோவில் பகுதியில் தங்கியிருக்கும் ஆளுநர், இன்று ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. ஆனால் இந்தக் கூட்டம் குறித்து, கூடுதலாக எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை.

ஆரோவில் பகுதியில் ஆளுநர் ஆய்வு குறித்த செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, தனிப்பட்ட முறையில் ஆளுநர் வந்துள்ளதாக அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்ததால், செய்தியாளர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in