Last Updated : 17 Nov, 2016 02:39 PM

 

Published : 17 Nov 2016 02:39 PM
Last Updated : 17 Nov 2016 02:39 PM

அதிமுக, திமுக வெற்றி பெற்றால் எந்தப் பயனும் இல்லை: பிரேமலதா

இடைத்தேர்தலில் அதிமுக, திமுக வெற்றி பெற்றால் எந்தப் பயனும் இல்லை. தேமுதிகவுக்கு வாக்களித்தால் மக்கள் மாற்றத்தை விரும்புவதாக அர்த்தம் என மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

3 தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று நடைபெற்று வருகிறது. தனது உச்சகட்ட பிரச்சாரமாக திருப்பரங்குன்றம் தொகுதியில் வலம் வரும் தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் பெருங்குடியில் வாக்காளர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது, "அதிமுகவை ஜெயித்தால் சட்டசபையில் டேபிள் தட்ட கூடுதலாக 3 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அதுவே, திமுகவை ஜெயித்தாலும்கூட அவர்கள் மைனாரிட்டி தான். ஆனால், தேமுதிகவுக்கு ஓட்டுப்போட்டால், நியாயத்தின் பக்கம் மக்கள் திரும்ப ஆரம்பித்துவிட்டார்கள், மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதைக் காட்டும்”

தமிழகத்தில் அதிக நாட்கள் பிரச்சாரம் செய்ததும், அதிக நாட்கள் மக்களைச் சந்தித்ததும் தேமுதிகதான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மற்றவர்கள் எல்லாம் ஒன்றிரண்டு பொதுக்கூட்டம் பேசிட்டுப் போயிடுறாங்க. சிலர் பிரச்சாரத்துக்கே வரலை. 500, 1000 செல்லாது என்று சொல்வதற்கு முன்பு, மக்கள் பாதிக்கப்படாதவாறு மாற்று ஏற்பாடுகளைச் செய்யவில்லை.

கண்டெய்னரில் பணம் கடத்தினவங்களை விட்டுவிட்டு கடுகு டப்பாவுல கை வைத்துள்ளார்கள். கறுப்புப்பணத்தை வெளியே கொண்டு வருவோம் என்றவர்களால் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வெச்ச சிறுவாட்டுப் பணத்தைத் தான் வெளியே கொண்டுவர முடிந்துள்ளது. 1200 கோடி விஜய் மல்லையாவுக்குத் தள்ளுபடி செய்த இந்த அரசு விவசாயிகளை தண்டிக்கிறது.

நேர்மையாக தேர்தலில் வாக்களிப்போம் என்று மாவட்ட ஆட்சியர்கள் உறுதிமொழி எடுக்க வைத்திருக்கிறார்கள். எதற்காக இந்த உறுதிமொழி? யாரை ஏமாற்ற நினைக்கிறார்கள்? இந்த 3 தொகுதிகளிலும் 3 நாளில் மட்டும் 13 கோடி பணத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள் அதிகாரிகள்.

பணத்தைக் கொண்டுவந்த வேட்பாளர்கள் 2 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டியது தானே? இதுகுறித்து எங்கள் வேட்பாளர்கள் முறையிட்டும் பிரயோஜனம் இல்லை. ஓட்டுக்கு காசு கொடுக்க வருகிறவர்களுக்கு மக்களே கரும்புள்ளி, செம்புள்ளி குத்த வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் செழிக்கும்.

‘இது இடைத்தேர்தல் அல்ல, இலைத்தேர்தல்’ என்று மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை, திருமங்கலம் பார்முலாவை உருவாக்கியதே திமுக தானே?

ஓட்டுப்போடச் சொல்லி வாக்காளர்களுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியதும், கருணாநிதியும் எழுதியிருக்கிறார். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே மக்கள் பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மாற்றத்திற்கான அடித்தளமாக இந்தத் தேர்தல்கள் இருந்தது என்பதற்கு உங்களது ஒவ்வொரு ஓட்டும் சாட்சியாக இருக்க வேண்டும். தேமுதிக வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்"

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x