

மழைக்காலங்களில் சுரங்கப் பாதைகளில் தேங்கும் நீரை உடனுக்குடன் வெளியேற்ற ரூ.3 கோடி செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கனமழை பெய்யும்போது ஜிஎஸ்டி சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால், மாநகர பேருந்துகள் மற்றும் இதர வாகனங் களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. வாகனங்களும் மெதுவாக செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதேபோல், பழவந்தாங்கல், நங்கநல்லூர், தில்லைகங்காநகர், பரங்கிமலை, மாம்பலம், சேத்துப்பட்டு, சானட்டோரியம், கோடம்பாக்கம், தாம்பரம், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கி விடுவதால், சுரங்கப்பாதை வழியாக இயக்க வேண்டிய பேருந்துகள் சேவை திடீரென தடைப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறிய தாவது:
நெடுஞ்சாலைத்துறையின் கீழ் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக, தில்லைகங்காநகர், பழவந்தாங்கல், பரங்கிமலை, மீனம்பாக்கம், பல்லாவரம் ஆகிய 5 இடங்களில் இருக்கும் சுரங்கப் பாதைகளுக்கு கூடுதல் பம்ப் செட்கள் வாங்கப்பட்டுள்ளன.
தேவையான அளவுக்கு புதிய ஜெனரேட்டர்களும் அமைக்கப் பட்டுள்ளன. வெளியேற்றப்படும் மழைநீர் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க தடுப்பு சுவர்களின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வெளியேற்றப்படும் நீர் தேங்காமல் செல்லும் வகையில் மழைநீர் கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளன. இதற்காக ரூ.3 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.