

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமரின் முயற்சிக்கு ஆதரவு அளிக்காமல் எதிர்க்கட்சிகள் பந்த், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை அறிவித்துள் ளன. நாட்டின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவை கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு வணிகர்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம்.
எதிர்க்கட்சிகளின் போராட்டங் களை முறியடிக்கும் விதமாக பிரதமரின் நடவடிக்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும். ‘மக்களுக் காக மோடி, மோடியுடன் மக்கள்’ என்ற வாசகத்தை முன்வைத்து, கறுப்புப் பண ஒழிப்புக்காக பிரதமர் எடுத்த நடவடிக்கைகளை வரவேற்று தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பாஜகவினரும் பிரச்சாரம் செய்வர்.
திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் மத்திய அரசு, சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நேரடி அந்நிய முதலீட்டை கொண்டுவர முயன் றது. அப்போது, பாஜகதான் அதை எதிர்த்து குரல் கொடுத்தது. இதேபோல, முந்தைய திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசுதான் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த முனைந்தது. அதை தற்போதைய பாஜக அரசு ரத்து செய்துள்ளது. இவற்றை எண்ணிப் பார்த்து விவசாயிகள், வியாபாரிகள், சிறு வணிகர்கள் பிரதமருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.