

விருதுநகர்: மதுரையில் இருந்து நான்கு வழிச்சாலையில் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்று கொண்டிருந்த வேனின் சக்கரம் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேஸ் சிலிண்டர்கள் சாலையில் உருண்டு ஓடியதால் பொதுமக்கள் பதற்றமடைந்து சிதறி ஓடினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரிலிருந்து கேஸ் நிரப்பப்பட்ட சுமார் 50 வணிக பயண்பாட்டுக்கான சிலிண்டர்களுடன் வேன் ஒன்று விருதுநகரில் உள்ள அழகாபுரி சாலை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் இருக்கும் தனியார் கேஸ் ஏஜென்ஸிக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்து கொண்டிருந்தது. வேனை பாலமேடு பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் (37) என்பவர் ஓட்டி வந்தார்.
விருதுநகர்- மதுரை நான்கு வழிச்சாலையில், புல்லலக்கோட்டை ஜங்சன் அருகே வந்த போது திடீரென வேனின் முன்பக்க சக்கரம் திடீரென வெடித்தது. இதனால், வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் ஏற்றி கொண்டு வரப்பட்ட சிலிண்டர்கள் அனைத்தும் சாலையில் விழுந்து உருண்டு ஓடின.இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பதற்றமடைந்து சிதறி ஓடினர்.
நான்கு வழிச் சாலையில் அடுத்தடுத்து வந்த வாகனங்களும் உடனடியாக திரும்பி எதிர் திசையில் வேகமாகச் சென்றன. அப்போது, திருப்பதியிலிருந்து திருநெல்வேலி நோக்கி வந்துகொண்டிருந்த கொரியர் லாரி மீது எதிர் திசையில் வேகமாகச் சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காரில் சென்றவர் சிவகாசியைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றித் தப்பினர்.
சிலிண்டர் லாரி விபத்துக்குள்ளான தகவலறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் உருண்டோடிய சிலிண்டர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர் சேகரித்து அடுக்கி வைத்தனர். சிலிண்டர்கள் ஏதும் வெடிக்காததால் பெரிய அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. இந்த விபத்து குறித்து விருதுநகர் மேற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.