Published : 18 Oct 2022 01:53 PM
Last Updated : 18 Oct 2022 01:53 PM

“மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கவில்லை” - கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு பதில்

சென்னை: கல்வியைப் பொதுப் பட்டியலில் நீடிக்கச் செய்வது கூட்டாட்சி கட்டமைப்புக்கு அச்சுறுத்தலானது என்று தமிழக அரசும், பொதுப் பட்டியலுக்கு மாற்றி கொண்டு வரப்பட்ட அரசியல் சட்டத் திருத்தம் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் இல்லை என்று மத்திய அரசும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுக்களில் தெரிவித்துள்ளன.

கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42-வது திருத்தத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் 'அறம் செய்ய விரும்பு' என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

தமிழக அரசு பதில் மனு: தமிழக அரசின் உயர் கல்வித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், "அரசியல் சட்டம், ஆரம்பத்தில் கல்வி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே விட்டிருந்தது. கடந்த 1975 முதல் 1977-ம் ஆண்டு வரை, 21 மாதங்கள் அவசர நிலை அமலில் இருந்தது. இந்தக் காலகட்டத்தில், சர்தார் ஸ்வரண் சிங் குழு அறிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் முறையான எந்த விவாதமும் நடத்தாமல், கல்வி, மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இது கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது.

இதனால் கல்வி குறித்த சட்டங்கள் இயற்றும்போது மாநில சட்டமன்றங்களை விட நாடாளுமன்றம் அதிக அதிகாரம் வாய்ந்ததாகி விடுகிறது. தற்போது தேசிய கல்விக் கொள்கை மூலமாக மத்திய அரசு, மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமையில் தலையிடுகிறது. மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்தும் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில், மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறாமல் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா என்பது பல மாநிலங்கள் அடங்கிய தேசம். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் என்ற தத்துவம் கொண்டு வர முடியாது. நாடு முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை என்பதும் பொருத்தமற்றது. கல்வி கடைக்கோடி வரை சென்றடைவதை மாநில அரசுகள் மட்டுமே உறுதி செய்ய முடியும். எனவே கல்வியை இன்னும் பொதுப் பட்டியலில் நீடிக்க செய்வது கூட்டாட்சி கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பதில் மனு: "28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களுடன் பல்வேறு சமூக - கலாசாரங்களை கொண்ட இந்தியாவில், கூட்டாட்சி கட்டமைப்பின் அடிப்படையில் தேசிய வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய - மாநில அரசுகள் பங்களிப்பு வழங்க வேண்டும். மனித வளர்ச்சிக்கு முதன்மையான கல்விக்கு நிதி ஒதுக்குவது உள்ளிட்டவற்றுக்கு மத்திய - மாநில அரசுகள் இணைந்து முன்னுரிமை வழங்க வேண்டும். கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றி கொண்டுவரப்பட்ட அரசியல் சட்ட திருத்தம் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் இல்லை. மாறாக, பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே உதவியுள்ளது.

இந்த அரசியல் சட்ட திருத்தம், கல்வியின் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வகை செய்துள்ளது. எனவே, தேசிய கல்விக் கொள்கை, மாநில அரசுகளின் தன்னாட்சி அதிகாரத்தை பறித்து விடுவதாக கூறுவது தவறு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை, நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முழு அமர்வு, நவம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x