Published : 18 Oct 2022 01:04 PM
Last Updated : 18 Oct 2022 01:04 PM

நம்மை காக்கும் 48 திட்டத்தில் இதுவரை ரூ.107 கோடி செலவில் 1.20 லட்சம் பேருக்கு சிகிச்சை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்ட அமைச்சர்

சென்னை: நம்மை காக்கும் 48 திட்டத்தில் இதுவரை ரூ.107 கோடி செலவில் 1.20 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிறப்பு அறுவை சிகிச்சை அரங்குகள், இருதய உட்புகுத்து ஆய்வகம், கண் அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் கண் தான வங்கி ஆகியவற்றை திறந்து வைத்து உலக விபத்து மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு தின உறுதிமொழி கையேட்டினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "2011 ஆம் ஆண்டு முதல், உலக விபத்து விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 17ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான விபத்து விழிப்புணர்வு நாளிற்கான கருப்பொருள் “உதவி செய்” என்பதாகும். விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்பது, விபத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு குறித்த நேரத்தில் உரிய சிகிச்சை கிடைப்பது ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் குறைந்தது 400 பேர் விபத்தினால் உயிரிழக்கிறார்கள். உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் ஒரு வருடத்திற்கு 50 இலட்சம் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இந்தியாவில் மட்டும் 2020 ஆம் ஆண்டு 3,54,796 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,03,116 ஆக அதிகரித்துள்ளது. விபத்து நிகழாமல் இருக்க சாலை விதிமுறைகளை பின்பற்றவும், தலை கவசம், சீட் பெல்ட் அணிவது பற்றியும், விபத்து நிகழ்ந்தால் முதலுதவி செய்வது பற்றியும், “Golden Hour” அதாவது விபத்துக்குள்ளானவர்களை குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கும் வகையில், மேல்மருவத்தூரில் 18.12.2021 அன்று, இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 என்ற மகத்தான திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில் 228 அரசு மருத்துவமனைகள், 445 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 673 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் நேற்று (அக்.17) வரை 1,20,918 பயனாளிகளுக்கு ரூ.107,79,45,470 அரசு செலவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் டிசம்பர் 2021 முதல் 20.09.2022 வரை 1832 விபத்து நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர். மேலும் ரூ.1.51 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அமைச்சர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x