ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு | உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய திருமாவளவன் மனு தள்ளுபடி 

திருமாவளவன் | கோப்புப்படம்
திருமாவளவன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து காவல்துறை அனுமதியளிக்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, திருமாவளவன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "பேரணிக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சினை. அதை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும். மாறாக, குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். காவல் கண்காணிப்பாளரையோ, காவல் ஆணையரையோ எதிர்மனுதாரராக சேர்ப்பதால் மட்டும் உரிமையியல் வழக்கை, குற்றவியல் வழக்காக கருத முடியாது" என வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுத்து, திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in