

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க கோரி இபிஎஸ் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவை இரண்டாவது நாளாக இன்று கூடியது. பேரவைத் தலைவர் வினாக்கள் விடைகளுக்கான நேரத்தை தொடங்கினார். அப்போது, இபிஎஸ் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் பேரவையில் அமளி ஏற்பட்டது.
அப்போது பேரவைத் தலைவர், "வினாக்கள் விடைகள் நேரம் முடிந்து கேள்வி நேரத்துக்குப் பின்னர், இதுகுறித்து கேள்வி எழுப்புங்கள். அப்போது நான் பதிலளிக்கிறேன்" என்றார். ஆனால், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இபிஎஸ், "உங்களைச் சந்தித்து கடிதம் கொடுத்திருக்கிறோம் எனவே பதிலளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
அப்போது மீண்டும் பேரவைத் தலைவர் அப்பாவு, "நீங்கள் பேசும் எதுவும் அவைக் குறிப்பில் பதிவு செய்யப்படாது. ஏற்கெனவே 89-ல் ஜானகி அவர்கள் பதவிப்பிரமாணத்தின்போது இதேபோல்தான் பிரச்சினை செய்தீர்கள். எனவே பிரச்சினை செய்யாதீர்கள், வினாக்கள் விடைகள் நேரம் முடிந்த பின்னர்தான் பேச வேண்டும்.
அவையின் மாண்பை கெடுக்காதீர்கள். நான் உங்களுக்கு பேசுவதற்கு நேரம் கொடுக்கிறேன். கலகம் செய்ய நினைக்காதீர்கள். கேள்வி நேரம் மக்கள் பிரச்சினை குறித்தது, அதற்கு தடை செய்கிறீர்கள்" என்று அவர் கூறினார். ஆனால், தொடர்ந்து இபிஎஸ் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பேரவையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்ற இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களை பேரவை வளாகத்தில் இருந்து வெளியேற்ற பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.