

சென்னை: திமுக அரசின் அவலங்களை சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் சேர்க்க வேண்டும் எனஅதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுரை வழங்கினார்.
அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், ‘ட்விட்டர் ஸ்பேஸஸ்’ ல் ‘பொன் விழா கண்ட அஇஅதிமுக’ என்ற தலைப்பில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி இணையவழியில் உரையாற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அதில் அவர் பேசியதாவது:
அதிமுகவின் தகவல் தொழில் நுட்ப பிரிவினர் திமுகவின் மிரட்டலுக்கு அஞ்சாமல், திமுக அரசின் அவலங்களை தெளிவாகவும், துல்லியமாகவும் சமூக வலைதளங்களின் பதிவிட்டு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். குறைந்தது 2 மணி நேரம் சமூக வலைதள பக்கத்தை பயன்படுத்த வேண்டும். அதேபோல், யூடியூப் சேனல்களை உருவாக்க வேண் டும்.
மேலும், சமூக வலைதளங் களில் எதிர்தரப்பினரிடம் விவாதம்செய்யும்போது கண்ணியத்துடனும், கவனமுடனும் விவாதத்தை முன்வைக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப பிரிவின் நோக்கம் நடுநிலையாளர்களுக்கும், சாமானியர்களுக்கும் பயனுள்ள தாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜய பாஸ்கர் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.