Published : 18 Oct 2022 05:45 AM
Last Updated : 18 Oct 2022 05:45 AM

எலிசபெத், முலாயம் சிங் உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல்: முதல்வர், உறுப்பினர்கள் மவுன அஞ்சலி

சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் ராணி எலிசபெத், முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பான கடிதங்கள் பேரவைத் தலைவரின் பரிசீலனையில் இருப்பதால், இருக்கையில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. சட்டப்பேரவை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிந்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள், பிரபலங்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள், இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நேற்று காலை 9.20 மணி முதலே திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் பேரவை அரங்குக்கு வரத் தொடங்கினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் 9.57 மணிக்கு அவைக்குள் வந்தார். பேரவைத் தலைவர் மு.அப்பாவு 10 மணிக்கு அவைக்குள் வந்தார். அவர், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு தொடர்பான இரங்கல் குறிப்புகளை வாசித்தார். அ.மு.அப்துல் இப்ராஹிம் (கடலாடி), கே.கே.வீரப்பன் (கபிலர் மலை), ஏ.எம்.ராஜா (பவானி), எஸ்.பி.பச்சையப்பன் (சங்கராபுரம்), எஸ்.புருஷோத்தமன் (அரியலூர்), பெ.சு.திருவேங்கடம் (கலசப்பாக்கம்), தே.ஜனார்த்தனன் (விழுப்புரம்), பே.தர்மலிங்கம் (பாளையங்கோட்டை), எம்.ஏ.ஹக்கீம் (மதுரை மத்தி), கோவை தங்கம் (வால்பாறை) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, அவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, ராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா நாகேந்திர குமரன் சேதுபதி, இந்திய விடுதலை போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், மலேசிய இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் எஸ்.சாமிவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, அந்த தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பேரவையின், கூட்டத்தை தள்ளிவைப்பதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

இபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு

ஒற்றைத் தலைமை சர்ச்சை காரணமாக, அதிமுகவில் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனித்தனி அணிகள் செயல்படுகின்றன. ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கிய பழனிசாமி, அவருக்கு பதிலாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் ஆர்.பி.உதயகுமாரை நியமித்து, இது தொடர்பான தகவலை பேரவைத் தலைவருக்கும் கடிதம் மூலம் தெரிவித்தார். அதேபோல, ஓபிஎஸ் சார்பிலும் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பான கடிதம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக இரு தரப்பினரும் பேரவைத் தலைவருக்கு மீண்டும் கடிதம் அளித்தனர். பழனிசாமி தரப்பில் 3-வதாக நினைவூட்டல் கடிதமும் அளிக்கப்பட்டது. இந்த கடிதங்கள் தனது பரிசீலனையில் இருப்பதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்திருந்தார்.

ஆனால், நேற்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர், துணைத் தலைவர் இருக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. காலை 9.58 மணிக்கு பேரவை அரங்குக்குள் நுழைந்த ஓபிஎஸ், ஏற்கெனவே தான் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்களான ஆர்.வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோரும் உடன் வந்திருந்தனர். ஆனால், பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் யாரும் சட்டப்பேரவைக்கு வரவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x