

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் தேமுதிகவுக்கு மக்கள் நலக்கூட்டணி ஆதரவளிக்காது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தல் வரும் நவம்பர் 19-ம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக தேமுதிக தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்திருந்த ம.ந.கூட்டணி, 3 தொகுதி தேர்தலை புறக்கணித்துள்ளது.
இந்நிலையில் 3 தொகுதி தேர்தலுக்காக ம.ந.கூட்டணியிடம் தேமுதிக ஆதரவு கோரினால் அதுபற்றி பரிசீலிப்போம் என்று விசிகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூறியிருந்தன. ஆனால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ யாருக்கும் ஆதரவில்லை என்றிருந்தார்.
இது, தொடர்பாக தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ''யாரிடமும் கேட்டு ஆதரவுப் பெறுவது சுயநலம். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் விரும்புபவர்கள் தேமுதிகவை ஆதரிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கூறியிருந்த விசிக தலைவர் திருமாவளவன், ''யாருக்கும் வலியச் சென்று ஆதரவு கொடுக்கும் நிலையில் ம.ந.கூட்டணி இல்லை'' என்று நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் ''தேமுதிகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறிய கருத்து தான் எனது கருத்து. 3 தொகுதி தேர்தலில் தேமுதிகவை ஆதரிப்பதாக இல்லை. ம.ந.கூட்டணியின் முடிவே எங்கள் முடிவு'' என்று கூறினார்.