

கடை வீதிகளில் தீபாவளி நெரிசலை தவிர்க்கும் வகையில், இரவில் கூடுதல் நேரம் கடைகளை திறக்க அனுமதிப்பது பற்றி பரிசீலித்து வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, புத்தாடை, பட்டாசு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கோவை மாநகர கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட வர்த்தகப் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தீபாவளிக்கு பொதுமக்கள் சிரமம் இல்லாமல், கோவை மாநகருக்குள் வந்து செல்வதற்காக மாநகர காவல்துறையின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வர்த்தகப் பகுதிகளில் 750 காவலர்கள் கண்காணிப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் மட்டும் வர்த்தகப் பகுதிகளுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து சென்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. எல்லா மக்களும் சிரமமின்றி வந்து செல்வதற்கும், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் தேவையான ஏற்பாடுகள் காவல்துறையால் செய்யப்பட்டுள்ளன.
திருட்டு சம்பவங்களை தடுக்க சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், சாதாரண உடைகளில் காவலர்கள் ரோந்து வந்தும் கண்காணிக்கின்றனர். உயர் கோபுரம் அமைத்தும் கண்காணிக்கப்படுகிறது. மக்கள் நெரிசலை தவிர்க்க, இரவு கடைகள் திறந்திருக்கும் நேரத்தை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நீட்டிக்க வர்த்தக நிறுவனங்களிடம் பேசியுள்ளோம்.
பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். வீடுகளை பூட்டிவிட்டு சொந்த ஊர் செல்பவர்கள் முன்கூட்டியே அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.