Published : 18 Oct 2022 06:55 AM
Last Updated : 18 Oct 2022 06:55 AM
சென்னை: மறைக்கப்பட்ட பட்டியல் சமூகத்தினரின் வரலாற்றை முன்னெடுக்கதிராவிட எதிர்ப்பாளர்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது என்று கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏர்போர்ட் மூர்த்தி தெரிவித்தார். திராவிட எதிர்ப்பாளர்கள் கூட்டமைப்பின் நோக்கம், செயல்பாடு, எதிர்கால திட்டங்கள் குறித்த கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏர்போர்ட் மூர்த்தி, வழக்கறிஞர் இளங்கோ, ரேவதி நாகராஜன், ராமமூர்த்தி, கவுதமன் சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது, ஏர்போர்ட் மூர்த்தி கூறியதாவது:
அம்பேத்கர் பெயரில் உள்ள 40-க்கும் மேற்பட்ட இயக்கங்களை ஒருங்கிணைந்து திராவிட எதிர்ப்பாளர்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் சங்ககாலம் ஒரு பொற்காலம். ‘பாணன், பறையன், கடம்பன், துடியன் இந்நான்கல்லது குடியும் இல்லை’ என்னும் புறநானூறு பாடலில் இருந்து இந்த நான்கு பிரிவுகளைக் கொண்ட மக்களை வைத்து தமிழ்க்குடி வளர்ந்துள்ளது.
அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா உள்ளிட்ட எண்ணற்ற ஆளுமைகள் பட்டியல் சமூகத்தினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வந்துள்ளனர். இவர்கள் செய்த வரலாற்று புரட்சிகள் மறைக்கப்பட்டுவிட்டன. இவர்கள் பெற்றுக் கொடுத்த உரிமைகளை, தாங்கள் பெற்றுக் கொடுத்ததுபோல திராவிட கட்சிகள், இயக்கங்கள் உரிமை கொண்டாடி வருகின்றன. பல்வேறு இதழ்களைபட்டியல் சமூகத்தினர் நடத்தி மக்களுக்கு அறிவூட்டி இருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் பாடப்புத்தகத்தில் கொண்டு வரவில்லை.
நீதிக்கட்சியினரும் பட்டியல்சமூகத்தினரை உதாசீனப்படுத்தினர். பட்டியல் சமூகத்தினரின் ஆதரவாலேயே ‘பெரியார்’ ஆனார் ஈ.வெ.ரா. ஆனால், இயக்கம் வளர்ந்தபிறகு பட்டியல் சமூகத்தினரின் கோரிக்கைகளை ஈ.வெ.ரா. புறந்தள்ளினார். திராவிட இயக்கங்களால், கட்சிகளால் பட்டியல் சமூகத்தினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள், அவமானங்கள், உரிமை இழப்புகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது பட்டியல் சமூகத்தினரின் கடமை. மறைக்கப்பட்ட வரலாற்றை முன்னெடுக்க வேண்டியும், அவர்களை ஒன்றுபடுத்தி, இழந்த உரிமைகளை வென்றெடுக்கவும், சமூக, பொருளாதார, அரசியல் அதிகாரத்தை பெறவும் இந்த திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு தொடங்கப்படுகிறது. பட்டியல் சமூகத்தினர் சமூக, பொருளாதார, அரசியல் அதிகாரத்தை பெற பல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக செய்து முடிக்க இக்கூட்டமைப்பு முயற்சி எடுத்து வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT