

இண்டூர் அருகே அரசுப் பள்ளிக்கு செல்லும் சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பள்ளி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ளது நத்தஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 170 பேர் இந்தப் பள்ளியில் படிக்கின்றனர். இவர்கள், பள்ளிக்கு செல்லும் சாலையில் தாழ்வான ஓரிடத்தில் மழைக்காலத்தில் வெள்ளம் கடந்து செல்லும். இண்டூர் ஏரி மற்றும் அதற்கு முன்னதாக உள்ள 4 ஏரிகள் என 5 ஏரிகள் அண்மைக் கால மழையால் நிரம்பியுள்ளன.
தொடர்ந்து மழை பெய்வதால் இண்டூர் ஏரியில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் நாகாவதி அணையை நோக்கி செல்கிறது. இவ்வாறு செல்லும் தண்ணீர், நத்த அள்ளி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலையை ஓரிடத்தில் கடந்து செல்கிறது. நேற்று காலை மாணவ, மாணவியர் பள்ளிக்கு செல்லும்போது குறுகிய அகலத்தில் மட்டுமே தண்ணீர் சாலையை கடந்து சென்று கொண்டிருந்தது.
மதியத்துக்கு பின்னர் தண்ணீரின் அளவு அதிகரித்து வெள்ளப்பெருக்காக மாறியது. இதனால், சாலையை ஆக்கிரமித்த தண்ணீரின் அகலமும் அதிகரித்தது.
இந்த வெள்ளத்தை பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பாக கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அப்பகுதி பெற்றோர், பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து மாலையில் மாணவ, மாணவியர் வெள்ளப்பெருக்கை கடந்து வீடு திரும்ப உதவி செய்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நீர்வழிப்பாதையில் அதிக அளவிலான நீர்வரத்து ஏற்பட்டதில்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நத்த அள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி கட்டப்பட்டது. ஆனால், நடப்பு ஆண்டில் தொடர் மழை காரணமாக கால்வாயில் தண்ணீர் ஓடுகிறது.
எனவே, இப்பகுதியில் பள்ளி மாணவ, மாணவியரும், கிராம மக்களும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் பாதுகாப்பாக பயணிக்க அரசு போதிய வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். பாலம் அல்லது தரைப்பாலம் கட்டுவதன் மூலம் மாணவர்களின் ஆபத்தான பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்றனர்.