

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்று கூறிய கேரள அரசின் நிலைபாட்டை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை என்ற அக்கோயிலின் நடைமுறைச் சம்பிரதாயங்களை வலியுறுத்திடும் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு எதிராக, மனித உரிமையிலும், பாலியல் நீதியிலும் அக்கறையும், கவலையும் கொண்ட கேரளவாழ் பெண்கள், அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இவ்வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் உள்ள அமர்வின் முன் நடைபெற்று வருகிறது.
இதுபோன்றே மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரபல கோயில்களில் (சிங்கணாப்பூர் சனிக்கோயில், நாசிக் திரிசம்பேஷ்வர் கோயில்களில்) பெண்கள் உள்ளே நுழையும், வழிபடும் உரிமைப் போராட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
தொடக்கத்தில் கடும் எதிர்ப்பு - மகாராஷ்டிர பாஜக - சிவசேனா கூட்டணி அரசு தயக்கம் காட்டியும், மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர்களது உரிமைக் குரலுக்குக் கிடைத்த ஆதரவு காரணமாக, அக்கோயில்களில் பெண்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமையைப் பெற்று, பாலியல் நீதி நிலைநாட்டப் பெற்றுள்ளது.
கேரள அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம், சபரிமலை அய்யப்பன் கோயிலில் இளம்பெண்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமை கோரும் வழக்கில் ஆணையிட்டது. முந்தைய அரசு பழைய சம்பிரதாயங்களை மீறக்கூடாது என்று கூறி, பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிப்பதை மறுதலித்துக் கூறியது.
ஆனால், திடீர் திருப்பமாக, பினராய் விஜயன் தலைமையில் புதிதாய் ஆறு மாதங்களுக்குமுன் பதவியேற்ற இடதுசாரி அரசு, இந்து சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமையை - மறுக்கக்கூடாது; என்ற நிலைப்பாட்டை 7.11.2016 ஆம் தேதி தனது வழக்குரைஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
மேலும், நீதிபதிகள் வரவேற்கும் முறையில், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை, அவர்கள் பெண்கள் என்பதால், புறக்கணித்துவிட முடியாது; பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்தால் வழிபாட்டு உரிமையை அவர்களுக்கு மறுப்பது நியாயமல்ல என்ற கருத்தைக் கூறி, பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு வழக்கைத் தள்ளி வைத்துள்ளனர்.
பினராய் விஜயன் தலைமையிலான கேரள அரசின், முற்போக்கு நிலைப்பாடும், மகளிருக்குப் பாலியல் நீதி வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதும் மிகவும் முக்கியமானவை. இங்கு பல ஊர்களில் ஐயப்பன் கோயில் சிலை, பெண் பக்கத்தில் உள்ளதாகவே இருக்கும்பொழுது, பெண்கள் போகக்கூடாது என்பது முரண்பாடு அல்லவா?
கேரளாவில் பகவதியம்மன் கோயில் திருவிழா என்பது என்ன? 10 வயதுக்கு மேற்பட்டு, 50 வயதுக்குட்பட்ட பெண்கள் - மாதவிடாய் காரணமாக - உள்ளே நுழைந்தால் தீட்டு - என்று ஒரு பொருந்தாக் காரணம் கூறப்படுகிறது!
பழைய பத்தாம் பசலித்தனத்தை சனாதனப் போர்வை போர்த்தி மூடி மறைத்து அய்தீகம் பேசுவதில் அர்த்தம் இல்லை. மின்சார விளக்கு உள்ளே வந்துவிட்ட பிறகு, அய்தீகம் - சம்பிரதாயம் பேசுவதில் அர்த்தமுண்டா?
எனவே, பாலியல் நீதி - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைப்படி மறுக்கப்படக் கூடாது. மக்கள் தொகையில் சரி பகுதியான பெண் மக்களுக்கு ஆதரவளித்த கேரள அரசைப் பாராட்டுகிறோம்.
உச்ச நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு அளித்தால் ஒரு புது யுகம் பிறக்கும்; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமையும் இதே தத்துவ அடிப்படையில்தான் நிறைவேற்றப்படவேண்டிய ஒன்றே'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.