Published : 18 Oct 2022 09:55 AM
Last Updated : 18 Oct 2022 09:55 AM

அரூர் பகுதியில் விடிய விடிய கொட்டிய மழை: 50 ஆண்டுகளுக்கு பிறகு கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு

அரூர் பகுதியில் கொட்டிய மழையால் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கல்லாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அடுத்த படம் : கோட்டப்பட்டி அருகே வெள்ளத்தில் 6 கிலோமீட்டர் அடித்துச் செல்லப்பட்ட கார். கடைசிபடம் : சின்னாங்குப்பம் அருகில் தடுப்பணை நிரம்பி ஆற்றில் செல்லும் வெள்ளநீர். படங்கள்: எஸ். செந்தில்

அரூர்

அரூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கொட்டிய மழையால் கல்லாற்றில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கால்நடைகள், விவசாய மோட்டார்கள், சொகுசு கார் உள்ளிட்டவை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் இடி, மின்னலுடன் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் பயிர்கள் நீரில் மூழ்கின. கால்வாய்கள் மற்றும் சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அரூர் வட்டம் கோட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆவலூர், சிலம்பை, தாது கொட்டை, தேக்கம்பட்டி, கொள்ளுநத்தம் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் பலத்த காற்று,இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. விடிய விடிய பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள கல்லாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதில் கரையோரம் உள்ள மலைவாழ் மக்களின் குடியிருப்புகள், ஆடுகள், கோழிகள் மற்றும் கிணறுகளில் இருந்த ஆயில் மோட்டார், மின் மோட்டார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், மஞ்சள்,நெல், மரவள்ளிக் கிழங்கு, வாழைதோட்டங்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் சேதமடைந்தன.

சிலம்பை பகுதியில் கல்லாற்றங்கரையோரம் உள்ள ஆசிரமத்தில் இருந்த கார் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த கார் 6 கிலோ மீட்டர்தொலைவில் உள்ள வனப்பகுதியில் முழுவதும் நொறுங்கி இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜி (65) கூறுகையில், 1972-ம் ஆண்டு கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதன் பிறகு இப்போதுதான் வெள்ளம் வந்துள்ளது. வெள்ளப்பெருக்கால் கரையோரப் பகுதியைச் சேர்ந்த மக்களின் கால்நடைகள், விவசாய கருவிகள், பயிர்கள் கடுமையான சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும், என்றார்.

வெள்ள எச்சரிக்கை: கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் உபரிநீர் அதிகளவில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள ஈச்சம்பாடி அணை நிரம்பியது. இதனால் ஆற்றில் உபரி நீர் முழுமையாக திறந்து விடப்பட்டதால் அனுமன் தீர்த்தம் பகுதியில் இருகரையை தொட்டவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஈச்சம்பாடி அணை நிரம்பி ஆற்றில் உபரி நீர் முழுமையாக திறந்து விடப்பட்டதால் அனுமன் தீர்த்தம் பகுதியில் இரு கரையை தொட்டவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x