

சென்னை: இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு மையம் (ஃபியோ), வெளிநாட்டு வர்த்தக ஆணையர் அலுவலகம் சார்பில் ஏற்றுமதியாளர்கள் மாநாடுசென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:
இந்தியா கடந்த நிதியாண்டில் சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்துள்ளது. 422 பில்லியன் அமெரிக்கடாலர் அளவுக்கு வணிகப் பொருட்கள் ஏற்றுமதியும், 254 பில்லியன் டாலர் அளவுக்கு சேவைகள் ஏற்றுமதியும் நடைபெற்றுள்ளது. கடந்த 2021-22-ம் ஆண்டு மொத்த ஜிடிபி-யில் ஏற்றுமதி 50சதவீதம் பங்களிப்பை வழங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 6மாத காலத்தில் நாட்டின் ஏற்றுமதி 15 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. வரும் 2047-ம் ஆண்டுக்குள் 30 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ளார். 2030-ம் ஆண்டுக்குள் 2 டிரில்லியன் டாலர் அளவுக்கான ஏற்றுமதி இலக்கை இந்தியா அடையும். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
மாநாட்டில் ஃபியோ தலைவர் ஏ.சக்திவேல் பேசும்போது, ‘‘ரஷ்யா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதிக்கான வாய்ப்புபிரகாசமாக உள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு நிதிப் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. எனவே, வங்கிகள் மூலம்ஏற்றுமதி மறுநிதி வசதியை அறிமுகப்படுத்த வேண்டும். அதேபோல், ஏற்றுமதி வணிகத்துக்கு ஜிஎஸ்டி விதிப்பில் இருந்து விலக்குஅளிக்க வேண்டும்’’ என்றார். மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டல ஆணையர் சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘தமிழகத்தில்வளர்ச்சியடைந்த தொழிற்சாலைகள் உள்ளன. ஆட்டோமொபைல், ஜவுளி, தோல் மற்றும் பொறியியல் உற்பத்தியின் மையக் கேந்திரமாக தமிழகம் திகழ்கிறது’’ என்றார். இந்த மாநாட்டில், ஃபியோ தென்மண்டல தலைவர் ஹபீப் ஹுசைன், இணை இயக்குநர் கே.உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.