Published : 18 Oct 2022 06:39 AM
Last Updated : 18 Oct 2022 06:39 AM
சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நேற்று முதல் தொடங்கியது. பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து ஆர்வமாக பட்டாசுகளை வாங்கிச் சென்றனர். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் சிறப்பு பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுதீபாவளி பண்டிகையையொட்டி 47 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பட்டாசு வாங்கவரும் மக்களின் வசதிக்காகபல்வேறு ஏற்பாடுகள் சுற்றுலாத்துறை செய்துள்ளது. முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தீவுத்திடலில் பட்டாசு விற்பனையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் நேற்று தொடங்கிவைத்தனர். பின்னர், கடைகளை பார்வையிட்டு, பட்டாசுகளின் விலை குறித்து வியாபாரிகளிடம் கேட்டறிந்தனர். பட்டாசு வெடிப்பது தொடர்பான பாதுகாப்பு வழிமுறைகள் அடங்கிய பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை செயலர் சந்திரமோகன், இயக்குநர் சந்தீப் நந்தூரி உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது: இந்த ஆண்டு பலபுதிய வகை பட்டாசுகள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து கடைகளும் முறையாகஅனுமதி பெற்று, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடங்கப்பட்டுள்ளன. பட்டாசு வெடிப்பதில் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதை பொதுமக்களும், விற்பனையாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால் விற்பனையில் எந்த பாதிப்பும் இல்லை. தற்போது 100 சதவீத பசுமை பட்டாசுகளே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாத் துறையை மேம்படுத்த ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் 10 சுற்றுலா தலங்களை தேர்வு செய்து, நிறைய வித்தியாசமான நிகழ்வுகளை நடத்தி வருகிறோம். சென்னை துறைமுகத்தில் சுற்றுலா கப்பல்களை இயக்குவதற்கு பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து பட்டாசுகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இந்த ஆண்டு குழந்தைகளுக்காக 100-க்கும் மேற்பட்ட வகையில் புதிய பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதால், குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT