

சென்னை: மாணவி சத்யா கொலை வழக்கு விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிபிசிஐடி போலீஸார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மாணவியின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை, அதேபகுதியைச் சேர்ந்த சதீஷ் கடந்த 13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில், மின்சார ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார். இதையடுத்து சதீஷை கைது செய்த ரயில்வே போலீஸார், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிசிஐடி போலீஸார் தங்களது முதற்கட்ட விசாரணையை கடந்த 15-ம் தேதி தொடங்கினர். சம்பவம் நடந்த பரங்கிமலை ரயில் நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீஸாரிடம் விசாரித்தனர். அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்தனர். இந்த விசாரணையின்போது, கொலை சம்பவம் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் சிக்கியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த மின்சார ரயிலை இயக்கிய ரயில் ஓட்டுநரிடமும் விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து, அடுத்தகட்டமாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் தலைமை காவலர் ராமலட்சுமி மற்றும் உறவினர்கள், அருகில் வசிப்பவர்களிடமும் சதீஷின் குடும்பத்தினரிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதேபோல், சிறையில் உள்ள சதீஷை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் சிபிசிஐடி போலீஸார் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்தனர். அப்போது, வழக்கை விரைவில் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.