

விருத்தாசலம் அருகே கருவேப் பிலங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்த நிலையில் உள்ளது. இங்கு பயிலும் மாண வர்கள் அச்சத்துடன் கல்வி பயிலும் நிலை உள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை 91 மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். அங்கு கடந்த 2016-ம் ஆண்டு கட்டப்பட்ட ஓடு மிகவும் சேதம் அடைந்தது.
இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி பூட்டப்பட்டுள்ளது. அதன் அருகே உள்ள ஓட்டுக் கட்டிடத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்தக் கட்டிடமும் மிகவும் சேதம் அடைந்து ஓடுகள் சரிந்து விழுந்து வருகின்றன. மாணவர்கள் மீது விழுந்து காயம் ஏற்பட்டு விடுமோ என பெற்றோர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மழை நீர் வகுப்பறையில் கசிந்து, மாணவர்கள் படிப்பதற்கு இடையூறாக இருந்து வருகிறது. மேலும் தரையும் ஈரமாவதால், மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தரக்கோரி அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத் துள்ளனர்.
இதுதொடர்பாக வட்ட தொடக்க கல்வி அலுவலர் பாஸ்கரிடம் கேட்டபோது, “சேதமடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களில் மாணவர்களை அமர வைக்க வேண்டாம் என அறிவுறுத்தி, அவர்களை அருகில் உள்ள கட்டிடத்திற்கு மாற்றி வகுப்பெடுக்க கூறியிருக்கிறோம். சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம்” என்றார்.