

ஐஆர்சிடிசியின் தெற்கு மண்டலம் சார்பில் இயக்கப்பட்ட 275 சிறப்பு சுற்றுலா ரயில்களில் ஒரு லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த ஆண்டின் நிறைவாக ‘பாரத் தர்ஷன்’ ஆன்மீக சுற்றுலா ரயில் அடுத்த மாதம் 9-ம் தேதி மதுரையில் இருந்து ஷீரடிக்கு இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஐஆர்சிடிசி யின் தென்மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி), கடந்த 2015-ம் ஆண்டு முதல் பல்வேறு சுற்றுலா சிறப்பு ரயில்களை இயக்கி வரு கிறது. குறிப்பாக பாரத தர்ஷன் ஆன்மீக சுற்றுலா, ரயில் சுற்றுலா, எல்டிசி பேக்கேஜ், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக கல்விச் சுற்றுலா உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஐஆர்சிடியின் தென்மண்டலம் சார்பில் இதுவரை மொத்தம் 275 சிறப்பு சுற்றுலா ரயில்கள் இயக்கப் பட்டுள்ளன. இந்த ஆண்டின் கடைசியாக பாரத தர்ஷன் ஆன்மீக சுற்றுலா திட்டத்தின்கீழ் ஷீரடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து அடுத்த மாதம் 9-ம் தேதி புறப்படும் இந்த சிறப்பு ரயில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக ஷீரடிக்கு செல்கிறது. அங்குள்ள சாய்பாபா, பண்டரிபுரம் பாண்டுரங்கன், மந்த்ராலயம் ராக வேந்தர் ஆகிய கோயில்களில் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 7 நாட்களைக் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ஒருவருக்கு சிலீப்பர் கிளாசில் ரூ.5,855 எனவும், 3 ஏசி பெட்டியில் ரூ.8,120 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ரயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன வசதி ஆகியவை அடங்கும். இது தொடர்பாக மேலும் தகவல்களைப் பெற சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 044-64594959, 9003140681 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.