

அரியலூர் மாவட்டம் மருவத்தூர் ரேஷன் கடையில், கண் கருவிழி சரிபார்ப்பு மூலம் பொருள் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கைரேகையைப் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் மேம்படுத்தப்பட்டு, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னையில் நேற்று தொடங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அரியலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் தரம், இருப்பு மற்றும் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிற்றரசு, பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் அறப்பளி, வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.