

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 வகுப்பு வகுப்பு மாணவரை தாக்கியதாக கூறி, ஆங்கிலம் மற்றும் இயற்பியல் பாட ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், இரண்டு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆட்சியர் பா.முருகேஷை நேற்று சந்தித்து மாணவர்கள் பிரவீன், முருகன் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், “பணியிடை நீக்கம் மற்றும் பணியிடை மாற்றம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து எங்கள் ஆசிரியர்களை, எங்களது பள்ளியில் மீண்டும் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, ‘4 ஆசிரியர்களின் பணியிடம் தொடர்ந்து நிரப்பப்படாமல் உள்ளது. பள்ளி திறந்து ஒரு வாரமாகியும் நிரப்பப்படவில்லை. எனவே, பணியிடை நீக்கம் மற்றும் இட மாற்றம் செய்யப்பட்ட 4 ஆசிரியர்களை மீண்டும் நியமிக்க வேண்டும்” என்றனர்.