

மதுரை: குடியுரிமை திருத்தச் சட்டப்படி இலங்கை இனப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், இந்தியக் குடியுரிமை பெற தகுதியானவர்கள்தான் என சென்னை உயர் நீதிமன்றக் கிளை கூறியுள்ளது.
உயர் நீதிமன்ற கிளையில் திருச்சியை சேர்ந்த அபிராமி தாக்கல் செய்த மனு: ''என் பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இலங்கைப் போரால் அகதிகளாக இந்தியா வந்தனர். நான் இந்தியாவில் 1993-ல் பிறந்தேன். இந்தியாவில் ஆதார் அட்டை பெற்றுள்ளேன். எனக்கு இந்தியக் குடியுரிமை கேட்டு திருச்சி ஆட்சியரிடம் மனு அளித்தேன். அவர் எனது விண்ணப்பத்தை மத்திய அரசுக்கு அனுப்பாமல் உள்ளார். என் விண்ணப்பத்தை மத்திய அரசுக்கு அனுப்ப ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ''மனுதாரரின் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள். மனுதாரர் இந்தியாவில் பிறந்துள்ளார். அவர் இலங்கை குடிமகளாக இல்லை. மனுதாரரின் இந்தியக் குடியுரிமை கோரிக்கையை நிராகரிப்பது சரியல்ல. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கான குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
அந்தச் சட்டத்தில் இலங்கையை சேர்ந்தவர்கள் சேர்க்கப்படவில்லை. இலங்கை இனப் பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்து தமிழர்கள் தான். இதனால் குடியுரிமை திருத்தச் சட்டப்படி இலங்கையை சேர்ந்தவர்களும் இந்திய குடியுரிமை பெற தகுதியானவர்களே. இதனால் மனுதாரர் குடியுரிமை கோரி அனுப்பிய விண்ணப்பத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் மத்திய உள்ளதுறை செயலாளருக்கு அனுப்ப வேண்டும். மத்திய உள்துறை செயலாளர் மனுதாரரின் கோரிக்கை குறித்து 16 வாரங்களில் சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.