

சென்னை: ஏற்கெனவே அறிவித்தபடி 293 சுய உதவிக் குழுக்களுக்கு விரைவில் ரூ.7.11 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.
சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் ராயபுரம் கிளைக்கு சொந்த அலுவலகக் கட்டிடத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி இன்று (அக்.17) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், "முதல்வர் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின், ராயபுரம் கிளைக்கு சொந்த கட்டடம் ரூ.108.00 லட்சம் செலவில் 3928 சதுர அடி பரப்பளவில் சொந்த அலுவலக கட்டப்படும் என வெளியிட்ட அறிவிப்பினை தொடர்ந்து தற்போது சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் ராயபுரம் கிளையின் புதிய அலுவலக கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
சென்னை மத்திய கூட்டுறவு வங்கி 10.07.1930 பதிவு செய்யப்பட்டு, கடந்த 92 ஆண்டுகளாக, சென்னை மாநரில் செயல்பட்டு வருகிறது. சென்னை மாவட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் இதர வகை கூட்டுறவு சங்கங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும் வங்கியின் இணை உறுப்பினர்களான பொது மக்களுக்கு தேவையான அனைத்து வகை கடன்களையும், இவ்வங்கி வழங்கி வருகிறது. இதுமட்டுமின்றி, அரசால் அறிவிக்கப்படும் நலத்திட்ட கடனுதவிகள் மற்றும் பண்ணை சாரா கடன்கள் அனைத்தும் குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் மேம்பாட்டிற்காக கடன்கள் வழங்கப்பட்டது.
முதல்வர் ஆணைப்படி, அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு 5758 பயனாளிகளுக்கு ரூ.29.09 கோடி அளவிற்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக் குழு கடன் திட்டத்தின் கீழ் 293 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7.11 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்யப்படவுள்ளது.
மாநில அரசு பல்வேறு திட்டங்களை ஆக்கபூர்வமாகவும், அர்ப்பணிப்புடனும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு பலதரப்பட்ட திட்டங்களை உருவாக்கி அதனை செயல்படுத்தி அவர்கள் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன், மகளிர் சுயஉதவி குழுக் கடன் போன்றவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நகைக்கடன் பெற்றுள்ள உறுப்பினர்களின் ரசீதுகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு ரசீதுகள் வழங்கப்படும்" என்று அமைச்சர் கூறினார்.