Last Updated : 17 Oct, 2022 02:15 PM

 

Published : 17 Oct 2022 02:15 PM
Last Updated : 17 Oct 2022 02:15 PM

காங்கிரஸ் தலைவர் தேர்தல் | நாடு முழுவதும் வலுவான இயக்கமாக காங்கிரஸ் மாறும்: நாராயணசாமி நம்பிக்கை

நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: தலைவர் தேர்தலுக்குப் பிறகு புது தெம்பு பெற்று நாடு முழுவதும் வலுவான இயக்கமாக காங்கிரஸ் மாறும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதையொட்டி புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் தளத்தில் உள்ள அறையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதுச்சேரி மாநில தேர்தல் அதிகாரி ஹிபி ஈடன் எம்பி முன்னிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹிபி ஈடன் எம்.பிக்கு உதவியாக கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செயல்பட்டு வருகிறார். இத்தேர்தலில் புதுச்சேரியில் மொத்தம் 29 பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர். ஏனாம் தொகுதிக்கான உறுப்பினர் இன்னும் நியமிக்கப்படவில்லை.

காலை 10 மணி அளவில் சீனியர் துணை தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான தேவதாஸ் முதல் வாக்கினை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்களித்தனர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வாக்கினை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி கூறியதாவது: "காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் என்ற முறையில் என்னுடைய வாக்கினை அளித்தேன். 24 ஆண்டுகளுக்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் காங்கிரஸ் கட்சியில் மட்டும்தான் பல காலக்கட்டங்களில் போட்டி என்று வரும்போது தேர்தல் நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தையும் பிரிக்க முடியாது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வழிகாட்டுதலோடு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போது காங்கிரஸூக்கு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரம் வந்துள்ளது. தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதால் காங்கிரஸ் கட்சியில் அடிப்படையில் இருந்து ஜனநாயகம் தழைத்தோங்குகிறது என்று தெரிகிறது.

ஆனால், பாஜகவில் கட்சித் தலைவர்கள் எல்லாம் நியமிக்கப்பட்டவர்கள்தான். தற்போது உள்ள ஜே.பி. நட்டா, அதற்கு முன்பு இருந்த அமித்ஷா, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு என எல்லோரும் நியமிக்கப்பட்ட தலைவர்கள்தான். யாரும் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற தலைவர்கள் அல்ல. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக புது தெம்பு பெற்று நாடு முழுவதும் வலுவான இயக்கமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இந்த தேர்தலில் நிற்க விரும்பவில்லை என கூறிய பிறகு அவர்களை யாரும் வலியுறுத்த முடியாது. இதனால் ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கிறது.

சிறப்பு கூறு நிதியில் தவறு நடந்திருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும். அதை பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை. நாங்கள் ஊழல் செய்யவில்லை. 6 வெளி நாட்டு மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்க ரூ.90 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாக பாஜக எம்எல்ஏவே கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது. கலால்துறையில் ஒரு மதுக்கடையின் உரிமத்தை மாற்றுவதற்கு ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்குகிறார்கள். அதற்கு புரோக்கர்கள் இந்த ஆட்சியில் இருக்கிறார்கள். எங்களது ஆட்சியில் வெளிப்படையான நிர்வாகத்தை கொடுத்தோம்.

நாங்கள் சிறுப்பு கூறு நிதியில் தவறு செய்திருந்தால், கண்ணில் விளக்கெண்ணையை போட்டு பார்த்து கொண்டிருந்த கிரண்பேடி சும்மா இருந்திருப்பாரா? பாஜகவுக்கு எங்களை குறை சொல்ல தகுதி கிடையாது. பொய்யான குற்றச்சாட்டை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் நானோ, என்னுடைய அமைச்சர்களோ தவறு செய்திருந்தால் அதை நிரூபிக்கட்டும். விசாரணைக்கு நாங்கள் தயாராக உள்ளோம்" என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x