

சென்னை: வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றது தொடர்பாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் குழந்தைகள் பிறந்த மருத்துவமனை கண்டறியப்பட்டுள்ளது என்றும், தேவைப்பட்டால் அவர்கள் இருவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் விசாரணை குழுவின் அறிக்கை சமர்ப்பித்ததாக தகவல் வெளியானது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "விக்னேஷ் சிவன், நயன்தாரா தரப்பில் தற்போது வரை எந்த ஒரு விளக்கமும் வழங்கப்படவில்லை. 6 வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆனதாகவும், கடந்தாண்டு இறுதியிலேயே வாடகைத் தாய் வேண்டி விண்ணப்பித்திருந்ததாக நயன்தாரா விக்னேஷ் சிவன் தரப்பில் எந்த ஒரு பதிலும் வழங்கப்படவில்லை.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி பதிவு திருமணம் செய்திருப்பின் அது குறித்து பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படும். அதற்கான நடைமுறையை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் வாடகைத் தாய் கண்டறியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.