Published : 17 Oct 2022 12:49 PM
Last Updated : 17 Oct 2022 12:49 PM

'கடைகளை பார்க்காமல் பொதுக்கூட்டத்தில் அரசை குற்றம் கூறுவது வருத்தமளிக்கிறது' - அமைச்சர் சக்கரபாணி 

கோப்புப் படம் | அமைச்சர் சக்கரபாணி

சென்னை: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், கடைகளை சென்று பார்க்காமல் பொதுக்கூட்டத்தில் அரசை குற்றம் கூறுவது வருத்தம் அளிக்கிறது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று (அக்.16) சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், காலையில் அவர்களது கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமயத்தில், தமிழ்நாட்டிற்கு நாங்கள் தரமான அரிசியை தந்துகொண்டிருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் ஆட்சி செய்கின்ற அரசு, பொதுமக்களுக்கு தரமில்லாத அரிசியைத் தருவதாக ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார்கள். இன்றைக்கு தொலைக்காட்சியில் வந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் கொடுக்கின்ற அரிசி தரமானதாக இருக்கிறது என்று சொல்கிறார்கள், அந்த அரிசி எப்படி தரமில்லாததாகப் போகும் என்பதை நான் உங்கள் யூகத்திற்கு விட்டுவிட கடமைப்பட்டிருக்கிறேன்.

குறிப்பாக, இன்றைக்கு அதாவது ஞாயிற்றுக்கிழமை அங்காடிக்கு எல்லாம் விடுமுறை. ஆனால் எந்தக் கடைக்கும் சென்று பார்க்கவில்லை. பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள் அரசாங்கத்தை குற்றம் சொல்லவேண்டும் என்பதற்காக எப்போதுமே உண்மைக்குப் புறம்பாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அங்காடிக்கு சென்று பார்க்காமலேயே தமிழ்நாட்டிலுள்ள பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள் அந்தக் கருத்தை அமைச்சரிடத்தில் சொல்லி அவரைப் பேச வைத்திருக்கிறார்கள். இது எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

அமைச்சர் இன்று (அக்.16) மாலை 4 மணிக்கு எங்கள் துறையின் செயலாளர், எங்கள் துறையின் ஆணையர், நிர்வாக இயக்குநர் ஆகியோரை வரவழைத்து கூட்டம் நடத்துகிறார். கூட்டம் நடத்துகின்ற சமயத்தில், எப்படி இப்படி தரமில்லாத அரிசியை கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார்களே என்று கேட்டிருக்கலாம். ஆனால், தமிழகத்தில் ஏற்கெனவே 376 அரிசி ஆலைகள் இருந்தன. இன்றைக்கு தமிழகத்தில் 712 ஆலைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான ஆலையில், தரமான அரிசியை நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு இந்திய உணவுக் கழக அதிகாரிகள், எங்களுடைய சிவில் சப்ளைஸ் கிடங்குகளாக இருந்தாலும் சரி, தனியார் அரிசி அரைக்கின்ற முகவர்கள் ஆலைக்கும் சென்று அரிசி முழுவதும் தரமாக இருக்கின்றதா என்று சோதனை செய்கிறார்கள். இந்திய உணவுக் கழகம் அரிசி எப்படி இருக்க வேண்டும், அரிசி அளவு குறியீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அதன்படி இருந்தால்தான், அந்த அரிசியை கிடங்கிற்கு அனுப்ப வேண்டும் என்று இந்திய உணவுக் கழக அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அப்படி இருக்கின்ற சமயத்தில், எப்படி தரமில்லாத அரிசியை பொதுமக்களுக்கு வழங்க முடியும்?

அரிசி என்பது தமிழ்நாட்டில் இருக்கின்ற 2 கோடியே 23 லட்சம் மக்களுக்கு முதலமைச்சரின் அரசு பொறுப்பேற்றதற்குப் பின்பு, கருணாநிதி அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கி இன்றைக்கு இந்தியாவிலேயே பொது விநியோக திட்டத்தில், சிறப்பு பொது விநியோக திட்டத்தைக் கொண்டுவந்து நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இப்படி இருக்கும் நேரத்தில், மத்திய அமைச்சர் சொன்னது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அதேபோல, கடந்த ஜுன் மாதம் இறுதியில், ஒரு நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் வந்திருந்தார். நானும் எங்களுடைய முதன்மைச் செயலாளரும் அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். அங்கே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, தமிழ்நாட்டில் எப்படி நியாய விலைக்கடைகள் செயல்படுகிறது என்பதையெல்லாம் கேட்டார். முதலமைச்சர், தமிழகத்தில் நியாய விலைக்கடைகளின் கட்டிடங்கள் எல்லாம் குறிப்பிட்ட வடிவமைப்பில் இருக்க வேண்டும் என்று வடிவமைத்துக் கொடுத்து, 10 லட்சம் ரூபாயில் கடைகள் கட்டுவதற்கு அனுமதி தந்திருக்கிறார். அந்தக் கடையைப் பார்த்துவிட்டு, இதே மத்திய அமைச்சர் மிகவும் பாராட்டினார்.

நீங்கள் ஜுலை 5ம் தேதி டெல்லிக்கு வர இருக்கிறீர்கள், அப்போது இந்த கடையைப் பற்றி Power Point Presentation காண்பிக்க வேண்டும் என்று சொன்னார். நானும், துறையின் முதன்மைச் செயலாளரும் டெல்லிக்கு சென்றிருந்தோம். இந்திய அளவில் அன்றைக்கு நடைபெற்ற இந்தியாவிலுள்ள பல்வேறு மாநில உணவுத் துறை அமைச்சர்கள், உணவுத் துறை செயலாளர், அதிகாரிகள் எல்லாம் கலந்துகொண்ட கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் Power Point Presentation போட்டு காண்பித்தார். அதைப் பார்த்து, தமிழ்நாட்டில் இப்படி கட்டியிருக்கிறார்கள், உண்மையிலேயே பாராட்டுக்குரியது என்று உணவுப் பாதுகாப்புத் துறை மத்திய அமைச்சர் பாராட்டினார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதேபோல, 27.9.2022 அன்று சென்னை தி.நகர் பகுதியில் 4 பொது விநியோக கடைகளை பார்வையிட்ட மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு உணவு மற்றும் பொது விநியோக திட்ட இணை அமைச்சர் அஸ்வின் குமார் சௌபே அவர்கள் கடையிலிருந்த பொருட்களைப் பார்வையிட்டு, தரமான பொருட்கள் என்று தனது கருத்தை தெரிவித்துச் சென்றார். அதேபோன்று, அக்டோபர் முதல் வாரத்தில் தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்த பொது விநியோகத் திட்ட பணிகளையும், கடைகளையும் ஆய்வு செய்துவிட்டு ஒன்றிய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு உணவு மற்றும் பொது விநியோக திட்டத் துறையின் செயலாளர், தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தை நல்லமுறையில் செயல்பாட்டில் இன்றைக்கு இருக்கிறது, அது மிகுந்த பாராட்டுக்குரியது என்று பாராட்டியது எல்லாம் செய்தித்தாளில் வந்திருப்பதை நான் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன்.

இன்றைக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடையை பார்த்த பின்னர் பொருட்கள் தரமில்லை என்று சொன்னால்கூட நாம் ஏற்றுக் கொள்ளலாம். இன்று ஞாயிற்றுக்கிழமை கடைக்கு விடுமுறை இருந்தும்கூட, கடையைப் பார்க்காமல், ஒரு பொதுக்கூட்டத்திற்குச் சென்று தமிழக அரசை குற்றம் சாட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் சொல்லியிருப்பது எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

இன்றைக்கு அரசு பொறுப்பேற்று, இந்த துறையின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். குறிப்பாக, இந்திய உணவுக் கழக அதிகாரிகளும் அரிசி எப்படி இருக்கின்றது என்று சிவில் சப்ளைஸ் கிடங்குகளையும், தனியார் அரிசி ஆலைகளையும் பார்க்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், நாங்கள் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, முதலமைச்சர் தமிழ்நாட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமாக 306 சிவில் கிடங்குகள் இருக்கின்றன. அந்தக் கிடங்கிலிருந்து நியாய விலைக்கடைக்கு பொருட்கள் செல்கின்றன,

அப்பொருட்கள் தரமான பொருட்களா என்பதைப் பார்த்துவிட்டுத்தான் கடைக்கு அனுப்பவேண்டும் என்று முதலமைச்சர் 4 அதிகாரிகளை இன்றைக்கு அமைத்திருக்கிறார். அதற்கு Convenor ஆக மாவட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு இணைப் பதிவாளர், அதோடு எங்களுடைய RM. SRM, எங்களுடைய Quality Control அதிகாரி ஆகியோர் பார்வையிட்டு, அந்தப் பொருட்கள் தரமானதாக இருக்கிறது என்றால்தான், நியாய விலைக்கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அப்படி அப்பொருட்கள் அந்த மாவட்ட ஆட்சித்தலைவரிடத்தில் காண்பித்து, மாவட்ட ஆட்சித்தலைவர், அது சரியாக இல்லை என்றால், அப்பொருட்கள் திருப்பி அனுப்பப்படுகிறது என்பதைத் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழகத்தில் 38000 நியாய விலைக்கடைகள் இருக்கின்றன. இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை உடனடியாக வாங்க வேண்டும், வாங்கிய நெல்லை தரமாக அரைத்து, பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்ற உத்தரவை வழங்கி இன்றைக்கு ஒரு பொற்கால ஆட்சியை முதலமைச்சர் நடத்திக் கொண்டிருக்கிறார். எனவே, இன்றைக்கு ஒன்றிய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் கடையையே பார்க்காமல், அவர்களது கட்சிக்காரர்கள் சொன்ன கருத்தை பொதுக்கூட்டத்தில் கூறியிருப்பது உண்மையிலேயே எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இந்திய வாணிபக் கழகத்தின் ஒரு ஏஜென்ட். இந்திய வாணிபக் கழகத்திலிருந்து நெல்லை வாங்கி அரிசியை அரைத்தாலும் அவர்களிடத்தில் தான் கொடுக்கிறோம். இந்திய உணவுக் கழகம் தான் அதற்குப் பொறுப்பு. அவர்களிடத்திலிருந்துதான் அரிசி வாங்குகிறோம். முன்னுரிமை அற்ற கார்டுகளுக்கு நாம் கொடுக்கிறோம். இருந்தாலும், தமிழ்நாட்டில் மாதந்தோறும் தேவைப்படும் அரிசி 3 இலட்சத்து 24 ஆயிரம் மெட்ரிக் டன். அதை நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்திய உணவுக் கழகத்தின் Control-ல் தான் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் இருக்கிறது. இந்திய வாணிபக் கழகம் அனைத்து கிடங்குகளையும் மற்றும் அனைத்து தனியார் மில்களையும் வந்து பார்த்து, அந்த அரிசி தரமில்லை என்றால், அந்த கருப்பு பட்டியலில் சேர்க்கச் சொல்லி எங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, ஒரு தவறான குற்றச்சாட்டு சொல்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. ஏனென்றால், அரிசியைப் பொறுத்தவரை 2 கோடியே 23 இலட்சம் மக்கள் இதை வாங்கி சாப்பிடுகிறார்கள். ஒரு அமைச்சர், ஒரு கடையை பார்த்தபின் இவ்வாறு கூறியிருந்தால், அதற்கு உண்மையிலேயே நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x