Published : 17 Oct 2022 11:14 AM
Last Updated : 17 Oct 2022 11:14 AM

அதிமுகவின் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமானது: ஓபிஎஸ் 

ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: "எம்ஜிஆரைப் பொருத்தவரை தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் அடித்தளம், ஆணிவேர். தற்போது கட்சியின் சட்டவிதிகள் மாற்றப்படுகின்ற சூழல் அபாயகரமானது. எனவே எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி விதிகளின்படிதான் அதிமுக இயக்கம் நடைபெற வேண்டும் என்று நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாள் அவை நடவடிக்கைகளுக்குப் பின்னர், ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "அதிமுக சார்பில், எங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக இன்றைக்கு இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டிருக்கிறோம்.

ஏற்கெனவே சட்டமன்றக் கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பாக பேரவைத் தலைவரை சந்தித்துவிட்டு வந்திருக்கிறோம். இன்றைக்கு அலுவல் ஆய்வுக் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை நாங்கள் முழு மனதோடு ஏற்றுக்கொண்டுள்ளோம்.

கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர், தொண்டர்களுக்காகத்தான் அதிமுகவை உருவாக்கி, 3 முறை முதல்வராக நல்ல பல திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார். அவரது மறைவுக்குப் பின்னால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டு காலம், இந்த இயக்கத்திற்கு மிகப்பெரிய வலுவினையும், தமிழக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று, சமூகப் பொருளாதார நிலையில் நடுநிலையாக நின்று நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றினார். இந்தியாவில் இருக்கும் பிற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியான முதல்வராக பணியாற்றினார்.

இந்த இருபெரும் தலைவர்கள், அதிமுகவுக்கு செய்த தியாகங்கள், கட்சியின் அடிப்பைடத் தொண்டர்கள் ரத்தம் சிந்தி தொடங்கியது இந்த இயக்கம். எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியின் சட்டவிதி, அதனை ஜெயலலிதா கட்டிக்காத்தார். இதில் எந்தவிதமான மாசும் படியாமல் காக்கின்ற பணிகளில்தான் நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம். எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், அச்சுறுத்தல்கள் வந்தாலும் அதை கட்டி காப்பாற்றுகின்ற சிப்பாய்களாகத்தான் ஒன்றரை கோடி தொண்டர்களும் இருக்கிறார்கள். எங்களுக்கு தமிழகத்தில் இருக்கின்ற மக்கள் அனைவரும் மிகப்பெரும் ஆதரவை தந்துகொண்டுள்ளனர்.

எம்ஜிஆரைப் பொருத்தவரை தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் அடித்தளம், ஆணிவேர். தற்போது கட்சியின் சட்டவிதிகள் மாற்றப்படுகின்ற சூழல் அபாயகரமானது. எனவே இந்த விதிகளின்படிதான் அதிமுக இயக்கம் நடைபெற வேண்டும் என்று நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x