Published : 17 Oct 2022 06:18 AM
Last Updated : 17 Oct 2022 06:18 AM

நாடாளுமன்ற தேர்தலின்போது சமூக நீதி, கூட்டாட்சி கருத்தியலில் நம்பிக்கை கொண்ட ஆட்சி அமைய அரசியல் நடவடிக்கை - ‘உங்களில் ஒருவன் பதில்கள்' தொடரில் ஸ்டாலின் உறுதி 

சென்னை: இந்தியாவில் சமூகநீதியில், கூட்டாட்சிக் கருத்தியலில் நம்பிக்கை கொண்ட ஆட்சி அமைவதற்கான அரசியல் நடவடிக்கைகளில் திமுக இறங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிடவியல் கோட்பாடுகள் - திராவிட மாடல் ஆட்சி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து சமூக வலைத்தளங்களிலும் மக்கள் உள்ளங்களிலும் எழும் கேள்விகளுக்கு, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கும் ‘உங்களில் ஒருவன் பதில்கள்' தொடரின் முதல் பாகம் நேற்று வெளியானது.

அதில் கேள்விகளும், முதல்வரின் பதில்களும்: மீண்டும் திமுக தலைவராகியுள்ளீர்கள். கட்சியை வழிநடத்த வருங்காலத்தில் புதிய திட்டம் உள்ளதா?

திராவிட மாடல்தான் என் பாதை.தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கும் வழிகாட்டியாக திமுக இருக்க
வேண்டும். இனி தமிழகத்தை திமுகதான் ஆளும் என்ற நிலை நீடிக்க வேண்டும். இந்த லட்சியத்துக்காக உழைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

நாடாளுமன்ற தேர்தலில், இந்திய அரசியலில் திமுகவின் பங்களிப்பு என்னவாக இருக்கும்?

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது முதல் இலக்கு. நாடு முழுவதற்கும் சமூகநீதியில், கூட்டாட்சி கருத்தியலில் நம்பிக்கை கொண்ட ஆட்சி அமைய வேண்டும் என்பது அடுத்த இலக்கு. இதற்கான அரசியல் நடவடிக்கைகளில் தேர்தல் நேரத்தில் இறங்குவோம்.

கோபாலபுரத்திலிருந்து கோட்டை வரை இந்த அரை நூற்றாண்டு பொது வாழ்க்கை குறித்து?

பொது வாழ்க்கை என்பது முள்கிரீடம்போல் என்பார்கள். என் பொது வாழ்வுக்கு அங்கீகாரம், கருணாநிதி சொன்ன, “உழைப்பு, உழைப்பு, உழைப்பு” என்பதுதான். என்னைப்பொறுத்தவரை, அந்த உழைப்பால் மக்களுக்கு விளையும் நன்மைகளில்தான் என் பொதுவாழ்க்கை அடங்கியுள்ளது. ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். அரசியல் காழ்ப்புணர்வோடு பரப்பப்படும் அவதூறுகள், என் காதுகளுக்கு எட்டுமே தவிர, அவற்றை என் மனதுக்குள் அனுமதிப்பது கிடையாது. என் சிந்தனை எல்லாம் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டுவர வேண்டும். தமிழக மக்களுக்குப் பணியாற்றுவதே என் கடமையாகக் கருதுகிறேன்

24 மணிநேரமும் பணியாற்றும் முதல்வர் என்ற பெயரை பெற்றுள்ள நீங்கள், உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொள்ளும் ரகசியம்?

நான் எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கேன். முன்பு கட்சிப் பணிமட்டும் இருந்தது. இப்போது நிர்வாகப்பணியும் சேர்ந்துள்ளது. வேலை அதிகமாகியுள்ளது. அதனை சரியாக பிரித்துநேரம் ஒதுக்கி செயல்படுகிறேன். காலை, மாலையில் உடற்பயிற்சி, சரியான, அளவான உணவு என உடல்நலத்தில் எப்போதும் கவனமாக இருப்பேன். வேலைகள் அதிகமாக இருந்தாலே உடல் சோர்வு வராது.

நீங்கள் திராவிட மாடல் ஆட்சி என்கிறீர்கள். மத்திய பாஜக அரசு ஆளுநரை வைத்து இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது?

இதை எதிர்கொண்டுதானே ஆட்சியை நடத்துகிறோம். நியமனப் பதவியான ஆளுநருக்கு உரிய பொறுப்புகள், அதிகார வரம்புகள் என்ன என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு உரிய கடமைகள், அதிகார வரம்புகள் என்ன என்
பதையும், நமது அரசியல் சட்டம் மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது. அதை புரிந்து நடந்து கொண்டால் யாருக்கும் பிரச்சினை இல்லை. அதுமட்டுமின்றி, ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 70 சதவீதத்துக்கும் மேல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். நிதிநிலை, மத்திய அரசின் ஒத்துழைப்பு சரியாக இருந்தால் இன்னும் பல திட்டங்களைத் தீட்டியிருக்க முடியும். இதுபோன்ற நெகட்டிவ் விஷயங்களை மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடிப்பதே என் பாணி.

ஒன்றரை ஆண்டு ஆட்சியில் சாதனைகள், சவால்கள் என்ன?

மக்கள் முகங்களில் நான் காணக்கூடிய சிரிப்புதான் என் சாதனை. நிதி நெருக்கடிதான் இருக்கின்ற சவால்.

தமிழகம் முழுவதும் சாலைகள் எப்போது சரி செய்யப்படும். மழைநீர் வடிகால் பணிகள் எப்போது முடிக்கப்படும்?

பத்தாண்டு காலமாக அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யப்படாததால்தான், இந்த நிலைமை. கடந்த 2021 மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, கரோனா 2-வது அலையை எதிர்கொண்டோம். அதில் இருந்து மீண்டபோது கடும் மழையை எதிர்கொண்டோம். அரசு அமைந்ததும், இயற்கைப் பேரிடரால் இனி சென்னை மக்கள் எந்தக் காலத்திலுமே துயரப்படாத வகையில் கட்டமைப்புகளை மேம்படுத்த முடிவெடுத்தேன். அதற்கு சிதைந்து கிடந்த சென்னையை முழுமையாக மீளுருவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்தப் பணிகள்தான் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்படும் சிரமங்களை சிறிதுகாலம் சென்னை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். சென்னை மட்டுமில்லாமல், தமிழ்நாடு முழுமைக்கும் இதேபோல மழைநீர் வடிகால் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைக்கு முன்னால் வடிகால் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா? முடியாதா?

முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காலதாமதம் ஆவதாலேயே நடக்காது என்று முடிவுக்கு வராதீர்கள். நீட் தேர்வை வைத்து மிகக் கொடூரமான சமூக அநீதியை இழைத்துக் கொண்டு இருக்கிறது பாஜக. வரும் நாடாளுமன்ற தேர்தல் அதற்குப் பாடம் புகட்டும்.

பாஜகவுடன் திமுக சமரசமாக போய் விட்டதாகக் கூறுகின்றனரே?

இப்படிச் சொல்லுவதை பாஜகவே ஏற்காது என அவர் பதிலளித்தார்.தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x