மத்திய அரசின் திட்டங்களை திமுக முறையாக அமல்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு 

மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் விழா தமிழக பாஜக சார்பில் சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல்  நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனிருந்தார். படம்: எம்.முத்துகணேஷ்
மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் விழா தமிழக பாஜக சார்பில் சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனிருந்தார். படம்: எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்புத்திட்டம், ஆயுள் காப்பீடு திட்டம் உட்பட 7 நலத்திட்டங்களின் பயன்களைப் பொதுமக்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்லும் நோக்கத்தில் தமிழக பாஜக சார்பில் சென்னை மண்டலத்துக்கு உட்பட 75 பகுதிகளில் சிறப்பு அரங்குகளை அமைத்து பதிவு மேற்கொள்ளும் நிகழ்வு நேற்று நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாகச் சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி அதிக நம்பிக்கை வைத்துள்ளார். தமிழகம் வளர்ச்சி அடைந்த, நேர்மையான மாநிலமாக மாற வேண்டும் என்று பிரதமர் எதிர்பார்க்கிறார். அதற்கேற்ப விரைவில் ஊழலற்ற தமிழகம் உருவாகும் என்று நம்புகிறேன். தற்போதைய திமுக அரசால் ஊழலற்ற ஆட்சியை வழங்க முடியாது. ஏனெனில், தமிழகத்தில் குடும்ப அரசியல் நடைபெற்று வருகிறது. இதனால் வளர்ச்சி பின்தங்கியுள்ளது.

விவசாயிகளுக்கான கிசான் திட்டநிதியுதவி இன்று (அக்.17) விடுவிக்கப்பட உள்ளது. மத்திய பாஜக ஆட்சியில் வீடுதோறும் சமையல் எரிவாயு, மின்சாரம், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. விரைவில் குடிநீரும் அனைத்து வீடுகளுக்கும் தரப்பட உள்ளது. மேலும், நாடு முழுவதும் 3 கோடி இலவச வீடுகள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் தமிழக மக்களும் பலர் பயன் பெற்றுள்ளனர். அதே நேரம் மத்திய அரசின் திட்டங்களை திமுக முறையாகக் கேட்டுப் பெற்று தமிழகத்தில் அமல்படுத்தவில்லை. மத்திய அரசு திட்டங்களால் தங்கள் ஆட்சிக்கு பாதிப்பு வருமோ என திமுகவினர் அஞ்சுகின்றனர். விரைவில் தமிழகத்தில் தாமரை மலரும், பாஜக ஆட்சி அமைக்கும். தற்போது அதற்கான நேரம் அமைந்துள்ளது. அதைப் பயன்படுத்தி தமிழகத்தில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து பாஜக ஆட்சி அமைய வழிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

50 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, ‘‘பிரதமரின் உத்தரவின்படி அனைத்து மத்திய அமைச்சர்களும் தமிழகம் வந்து ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 20 பேர் தமிழகம் வந்துள்ளனர். அடுத்த 20 நாட்களில் 50 மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு வரவுள்ளனர். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல்முறையாக ஒரே மாதத்தில் அனைத்து மத்திய அமைச்சர்களும் தமிழகம் வந்து மக்கள் நலப் பணிகளில் ஈடுபட உள்ளனர்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in