

மதுரை: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர் முடிவுதான் இறுதியானது. அவரது முடிவுக்கு கட்டுப்படுவோம். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்சியை எந்த நோக்கத்துக்காக வளர்த்தார்களோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையில் எங்களின் செயல்பாடு இருக்கும். தொண்டர்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் வகையில் கட்சியின் சட்ட விதிகளை எம்ஜிஆர் உருவாக்கினார். தொண்டர்களின் உரிமை பறிபோகாமல் காப்பதே எங்களின் நோக்கம். மக்களிடம் அரசு தெரிவித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது, நிறைவேற்றப்படாமல் உள்ள கோரிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் குரல் எழுப்ப உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.