Published : 14 Nov 2016 05:54 PM
Last Updated : 14 Nov 2016 05:54 PM

ரூபாய் நோட்டுகளை மாற்ற சுற்றுலா பயணிகளுக்கு தனி ஏற்பாடுகள் தேவை: ஞானதேசிகன்

ரூபாய் நோட்டுகளை மாற்ற அயல்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தனி ஏற்பாடுகள் செய்தாக வேண்டும் என்று தமாகா துணைத் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பிரதமர் மோடி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லுகின்ற காரணத்தை ஏற்றுக்கொண்டாலும், முறையான முன்னேற்பாடுகள் இல்லாத காரணத்தால் கடந்த ஐந்து நாட்களாக சிறு வியாபாரிகள், நடுத்தர மக்கள், அன்றாடம் வேலை செய்து தினக்கூலி பெறுவோர்; இன்றைக்கு படுகிற அவதியை காண சகிக்கவில்லை.

வங்கிகள் முன்பும், ஏடிஎம் முன்பும் பலமணிநேரம் ஆண்களும், பெண்களும், சிலபேர் குழந்ததைகளுடனும், முதியவர்களும், கடும் வெயிலில் நீண்ட வரிசையில் நிற்கும் துயரநிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

இன்றைய செலவிற்கு என்ன செய்வது என்று சிலபேர் ஏங்கிய நிலை ஏற்படுகின்ற சூழ்நிலை உள்ள இந்த நாட்டில் எல்லோரையும், இந்த நிலைக்கு தள்ளப்பட்டது தவறான செயலாகும். உடனடியாக நீண்ட வரிசையில் காத்து நிற்கின்ற மக்களுக்கு நிழல்தரும் வகையில் சாமியானா நிறுவவேண்டும். அவர்களுக்கு குடிதண்ணீர் ஏற்பாடு செய்யவேண்டும்.

வங்கிகளுக்கும், ஏடிஎம்மிற்கும், உடனடியாக அதிகப்படியான பணத்தை ரிசர்வ் வங்கி அனுப்ப வேண்டும், சுற்றுலா பயணிகளுக்கு குறிப்பாக அயல்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தனி ஏற்பாடுகள் செய்தாக வேண்டும்.

மேல்நாட்டு சுற்றுலா பயணிகள் ஒரு ஐந்து நாட்கள், ஏழு நாட்கள் இந்தியாவை சுற்றிப் பார்க்க வந்த இடத்தில் ஒவ்வொரு ஊரிலும் நான்கு மணிநேரம் வரிசையில் நின்று பணம் மாற்றுவது என்பது நமது நாட்டின் மரியாதையை, பெருந்தன்மையை குலைக்கின்ற செயலாகும். இவர்களுக்கு தக்க உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும்'' என்று ஞானதேசிகன் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x