பசும்பொன் தேவர் குருபூஜைக்கு வங்கியிலிருந்து தங்க கவசத்தை அறங்காவலரே பெற முடிவு

காந்தி மீனாள் நடராஜன்
காந்தி மீனாள் நடராஜன்
Updated on
1 min read

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்.28 முதல் 30-ம் தேதி வரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். இவ்விழாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்கக் கவசம் தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும்.

இந்த தங்கக் கவசம், மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையின் பெட்டகத்தில் அதிமுகவின் பொருளாளர் மற்றும் தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாள் நடராஜன் ஆகியோர் பெயர்களில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவால், தேவர் குருபூஜைக்காக தங்கக் கவசத்தை உரிமை கோருவதற்கான கடிதம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகிய இருதரப்பில் இருந்தும் வங்கி மேலாளரிடம் வழங்கப்பட்டுள்ளது. வங்கித் தரப்பில் எந்த ஒரு முடிவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த14-ம் தேதி பசும்பொன்னில் காந்தி மீனாள் நடராஜனை, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பழனிசாமி தரப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் சந்தித்து தாங்களே தேவர் தங்கக் கவசத்தை எடுத்து ஒப்படைப்பதாக கடிதம் அளித்தனர்.

இந்நிலையில் நேற்று காந்தி மீனாள் நடராஜன் கூறியதாவது: அதிமுகவினர் தற்போது, இரு பிரிவாக இருப்பதால், இதில் எந்தத் தரப்புக்கும் நாங்கள் ஆதரவு தர முடியாது. தேவரின் தங்கக் கவசம் வைக்கப்பட்டுள்ள வங்கிப் பெட்டகத்தின் சாவி என்னிடம் உள்ளது. எனவே, இரு தரப்பும் வேண்டாம், நானே வங்கிக்குச் சென்று தங்கக் கவசத்தைப் பெற்று தேவர் சிலைக்கு அணிவிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in