Published : 23 Nov 2016 03:10 PM
Last Updated : 23 Nov 2016 03:10 PM

துணைவேந்தர் கையெழுத்தில்லாமல் சென்னைப் பல்கலை. பட்டமா?- அன்புமணி கண்டனம்

சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி பல மாதங்களாக காலியாக கிடக்கும் நிலையில், துணைவேந்தர் கையெழுத்தின்றி பட்டங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னைப் பல்கலைக்கழகத்தின் 159-ஆவது பட்டமளிப்பு விழா டிசம்பர் முதல் நாள் சென்னையில் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி பல மாதங்களாக காலியாக கிடக்கும் நிலையில், துணைவேந்தர் இல்லாமல் விழா நடைபெறும், துணைவேந்தர் ஒப்பமின்றி பட்டங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவின் எந்தப் பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தர் இன்றி பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டதோ, துணைவேந்தரின் கையெழுத்தின்றி பட்டம் வழங்கப்பட்டதோ கிடையாது. சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி கடந்த 10 மாதங்களாக நிரப்பப்படாமல் கிடக்கும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை மறைப்பதற்காக, பல்கலைக்கழக பாரம்பரியத்தை சீர்குலைக்கும் வகையில் இப்படி ஓர் ஏற்பாட்டை உயர்கல்வி செயலர் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

துணைவேந்தரின் கையெழுத்தில்லாமல் பட்டங்கள் வழங்கப்படும் பட்சத்தில், வெளிநாட்டு அல்லது வெளிமாநில பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்க மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது அவர்களின் பட்டங்கள் செல்லாது என்று அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது. இதனால் அவர்களின் உயர்கல்வி வாய்ப்பு பாதிக்கப்படும் ஆபத்துள்ளது.

சென்னை பல்கலைக்கழக அமைப்புச் சட்டத்தின் 20ஆவது பிரிவின்படி, பட்டச் சான்றிதழில் கையெழுத்திடும் அதிகாரம் துணைவேந்தருக்கு மட்டுமே உண்டு. துணைவேந்தர் இல்லாதபட்சத்தில் ஆட்சிக்குழுவால் (சிண்டிகேட் குழு) நியமிக்கப்படும் ஒருவர் துணைவேந்தருக்குப் பதிலாக பட்டங்களில் கையெழுத்திடலாம். அதன்படி, சென்னை பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவரும், உயர்கல்வித்துறையின் செயலாளருமான கார்த்திக்கு அந்த அதிகாரத்தை வழங்குவது குறித்து கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்ததால் அத்திட்டத்திற்கு அனுமதி கிட்டவில்லை.

அதைத்தொடர்ந்து நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவைக் குழு (செனட்) கூட்டத்திலும் இத்திட்டம் நிராகரிக்கப்பட்டதால், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை கோரப்பட்டிருக்கிறது. அவரது கருத்தும் நிறைவானதாக இல்லாததால், யாருடைய கையெழுத்துமில்லாமல் பட்டம் வழங்குவதென்றும், துணைவேந்தர் கையெழுத்திட வேண்டிய இடத்தை காலியாக விட்டுவிட்டு, அதற்கு அருகில் உயர்கல்வித்துறை செயலாளரின் கையெழுத்து முத்திரையை பதிப்பது என்றும் புத்திசாலித்தனமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆற்காடு லட்சுமணசாமி முதலியார், நெ.து. சுந்தர வடிவேலு, மால்கம் ஆதிசேஷய்யா போன்றோர் துணைவேந்தர்களாக இருந்து, சர்.சி.வி. இராமன், அப்துல்கலாம் போன்ற ஏராளமான ஜாம்பாவான்களை உருவாக்கிய சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருப்பது உண்மையாகவே வேதனையும், வருத்தமும் அளிக்கிறது.

சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த தாண்டவன் கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்ற நிலையில், உடனடியாக புதிய துணைவேந்தரை நியமித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்திற்கு தாமதிக்காமல் புதிய துணவேந்தரை நியமிக்கும்படி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், செயல்படாத அரசு அதை காதில் வாங்கி கொள்ளவில்லை.

துணைவேந்தர் மட்டுமின்றி உயர்கல்வித்துறை செயலர் பதவிக்கும் 6 மாதங்களாக யாரையும் நியமிக்கவில்லை. அதன்விளைவாக உலகுக்கே வழிகாட்டியாக இருந்த சென்னை பல்கலை. இப்போது பொறுப்பு வேந்தரின் தலைமையில், பொறுப்பு துணைவேந்தரின் நிர்வாகத்தில், பொறுப்பு உயர்கல்வித்துறை செயலரின் வழிகாட்டுதலில் செயல்பட வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

17.08.2013 அன்று சென்னைப் பல்கலைக்கழக 155ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய ஜெயலலிதா, ''பல்கலைக்கழகக் கல்வியின் உலக மையமாக தமிழகத்தை உருவாக்க பாடுபட்டு வருகிறேன்'' என்று கூறினார். இதுதான் தமிழகத்தை உயர்கல்வியின் உலக மையமாக மாற்றும் லட்சணமா? என்பதை தமிழகத்தின் இன்றைய ஆட்சியாளர்கள் தான் விளக்க வேண்டும்.

சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 09.04.2015 தேதி முதல் 20 மாதங்களாகவும், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ஜூன் முதல் 5 மாதங்களாகவும் காலியாக உள்ளன. காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாததால், அங்கு படித்த மாணவர்கள் பட்டம் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநிலை நீடித்தால் தமிழக உயர்கல்வித்துறை சீரழிந்து விடும்.

எனவே, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உடனடியாக நிறுத்த ஆளுநர் ஆணையிட வேண்டும். 3 பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை ஒரு மாதத்திற்குள் நிரப்பி, அதன்பின்னர் பட்டமளிப்பு விழாக்களை நடத்த ஆணையிட வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x