

நீலகிரி மாவட்டம் வந்த மக்களவைத் தொகுதி உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 50 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், அவருக்கு எதிராக பாஜக உட்பட இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையி்ல், நீலகிரி மாவட்டத்துக்கு நேற்று வந்த ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி, உதகை ஏடிசி சுதந்திர திடல் முன்பு பாஜக சார்பில் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரத் தலைவர் பிரவீன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, நகர மகளிரணி நிர்வாகி விஜயலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.