

விவசாயிகள் நலன் காக்க பயிர் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையை அரசே ஏற்கவும், விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் முன்வர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிடும் பயிர், விவசாயக் கடன், விவசாயத்திற்காக நிலம் மற்றும் வீடு அடகு வைப்பது போன்றவற்றிற்கு காப்பீடு செய்து, அவற்றிற்காக பிரீமியத் தொகை செலுத்த வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள வழக்கமான ஒன்று.
ஆனால் கடந்த பல வருடங்களாக விவசாயம் நலிவடைந்து போனதால் விவசாயிகள் விவசாயக் கடனை முழுமையாக கட்ட முடியாமல், பயிர் காப்பீட்டுத் தொகையும் செலுத்த முடியாத நிலையில் பெரும் சிரமத்தோடு வாழ்கிறார்கள்.
இந்நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரீமியத் தொகையை இந்த மாதம் (நவம்பர் மாதம்) இறுதிக்குள் உள்ளூர் கூட்டுறவு வங்கியில் செலுத்த வேண்டும் என்று அரசு காலக் கெடு விதித்துள்ளது.
ஆனால் கடந்த ஒரு வார காலமாக விவசாயிகள், சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைவரும் தாங்கள் சேமித்த சிறு தொகையை வங்கிகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பெறமுடியாத நிலையில் இருக்கிறார்கள். குறிப்பாக கூட்டுறவு வேளாண்மை வங்கிகளில் புதிய நோட்டுகள் இல்லாத காரணத்தால் அங்கு பணம் பெறமுடியாமல் விவசாயிகள் இன்னல்களுக்கு உட்படுகிறார்கள். இதனால் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் தொகையை அரசு அறிவித்த தேதிக்குள் செலுத்த முடியாத சூழலில் தற்போது இருக்கிறார்கள்.
இவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் விவசாயிகள் அந்த தொகையை செலுத்த தவறினால் பயிர் காப்பீடு கிடைப்பதற்கு வழி இல்லாத நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு தற்போது விவசாயிகள் அடைந்துள்ள நஷ்டத்தை உணர்ந்து அவர்களின் ஒரு ஏக்கருக்கான பிரீமியத் தொகை ரூ.375 ஐ அரசே ஏற்க முன்வர வேண்டும். பிரீமியத் தொகைக்கான காலக் கெடுவை அரசு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
பொது மக்கள் குறிப்பாக விவசாயிகள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கு ஏதுவாக 50, 100 ரூபாய் மற்றும் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் உடனடியாக மத்திய அரசு அனுப்பிட வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் தற்போதைய சூழல் சீரடையும் வரை நடமாடும் வங்கிச் சேவையை மத்திய அரசு அதிகப்படுத்திட வேண்டும்.
மொத்தத்தில் விவசாயிகள் வாங்கிய அனைத்து விதமான விவசாயக் கடன் முழுவதையும் மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு கடன் கொடுத்து விவசாயத்தை மேம்படுத்தி, விவசாயிகள் நலன் காக்க வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.