தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தொடர் மழையால் மாரசந்திரம் தடுப்பணையில் இருந்து கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரிக்கு கால்வாய் வழியாக சீறிப் பாய்ந்து செல்லும் தண்ணீர். 						        படம்: எஸ்.கே.ரமேஷ்
தொடர் மழையால் மாரசந்திரம் தடுப்பணையில் இருந்து கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரிக்கு கால்வாய் வழியாக சீறிப் பாய்ந்து செல்லும் தண்ணீர். படம்: எஸ்.கே.ரமேஷ்
Updated on
1 min read

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 4,230 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6,774 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து விநாடிக்கு 8,305 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50 அடியாக உள்ளது. நீர்திறப்பு அதிகரிப்பு காரணமாக அணை பூங்காவுக்கு செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. இதனால், தரைப்பாலம் வழியே பயணிகள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 824 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1,157 கனஅடியாக அதிகரித்தது. இதே அளவு நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 17 அடியாக உள்ளது. சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 18 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 284 கனஅடியாக அதிகரித்தது. அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், நீர்வரத்து முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,537 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3,028 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து விநாடிக்கு 2,340 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 42.97 அடியாக உள்ளது.

அஞ்செட்டியில் 40 மிமீ மழை: கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: அஞ்செட்டி 40, தேன்கனிக்கோட்டை 39, ஓசூர் 39, ஊத்தங்கரை 29.20, சூளகிரி 25, தளி 20, கிருஷ்ணகிரி 15.80, ராயக்கோட்டை 15, பெனுகொண்டாபுரம் 9.20, நெடுங்கல் 5, பாரூர் 3.60, போச்சம்பள்ளி 2.20 மிமீ மழை பதிவானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in